கேரள மாநிலத்தில் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக நம்பப்படும் நோரோ வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள வயநாடு அருகே உள்ள பூக்கோடு என்ற கிராமத்தில் கால்நடை மாணவர்கள் 13 பேரை இந்த வைரஸ் தாக்கியிருப்பதை அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த வைரஸ் அறிகுறியுடன் மேலும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். “இப்போதைக்கு இந்த வைரஸ் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்றாலும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று வீணா ஜார்ஜ் எச்சரித்துள்ளார். இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக நம்பப்படுகிறது. இதற்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை.

தீவிர வேகத்தில் பரவும் தன்மையைக் கொண்ட இந்த வைரஸ் தாக்கினால், சம்பந்தப்பட்ட நபருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இது வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்குவதாக கேரள சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து அது 24 முதல் 48 மணி நேரம் மட்டுமே வாழும். அதற்குள்ளாக இது இரைப்பை, குடல் நோயை தோற்றுவித்து விடும் தன்மையைக் கொண்டுள்ளது. வயிறு மற்றும் குடலின் உட்புறத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை இந்த வைரஸ் உண்டாக்கும்.

நோரோ வைரஸ் பரவிய ஒன்று முதல் மூன்று நாட்களுக்குள்ளாக நோயாளி மருந்து ஏதும் உட்கொள்ளாமல் முழுமையாக குணமடையலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வயோதிகர்கள், குழந்தைகள், ஏற்கெனவே மருத்துவ குறைபாடுடையவர்களுக்குத்தான் இந்த வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

By Anna