காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்? தமிழக முதல்வர் விளக்கம்!

காவிரி விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கியதும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் பேசியது: காவிரி பிரச்னையில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியன அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் முதல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கியபோதும் அதில் நமக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் 14 டி.எம்.சி. நீர் நம்மை விட்டுப்போய் உள்ளது.

மீதமுள்ள தண்ணீராவது வந்து சேர்ந்தால்போதும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு இடையே மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தில் மிகையளவு மழை பெய்துள்ளது. இதனால் மீதமாகும் தண்ணீரைத் திறந்து விட்டு அதுவே நமக்கான பங்கு நீர் என கர்நாடகத்தினர் கூறுவர். இதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வர் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அதில், உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும், ஸ்கீம் குறித்து மீண்டும் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு, பழைய பல்லவியையே மீண்டும் பாடியுள்ளனர். எனவே, இப்படிப்பட்ட நிலையில் நாமும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி நமது நிலையை விளக்குவோம். நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை விளக்கிட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார் துரைமுருகன்.

முதல்வர் பழனிசாமி:

காவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீரான 177.25 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் பத்து நாள்களுக்கு ஒருமுறை கூடி எவ்வளவு தண்ணீர் தரப்படுகிறது என்பதை எல்லாம் ஆய்வு செய்து, அதனடிப்படையில் நமக்கு தண்ணீர் வழங்க இருக்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்க்கலாம்:

எனவே, இந்தப் பிரச்னையைப் பொருத்தவரை பொறுத்திருந்து பார்க்கலாம். நமக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மத்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது, ஆணையம் எப்படி செயல்படுகிறது என்ற விவரத்தையெல்லாம் தெரிந்த பிறகு அனைத்துக் கட்சி கூட்டத்தை தேவையிருப்பின் கூட்டி அதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.

துரைமுருகன்:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில், தமிழகத்துக்கான தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெற்று வருவதால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஊடகத்தில் வரும் செய்திகளின் அடிப்படையில்தான் கூறுகிறேன். காவிரி உரிமை மீட்பு நடவடிக்கையில் தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது என்றார்.