போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு? ரவுடி என்கவ்ன்ட்டர்!

சென்னை கிண்டியில் போலீஸை வெட்டிய ரவுடியை போலீஸார் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் கொல்லப்பட்டார். இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்தார்.

சென்னை பி.எம்.தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். நேற்று பி.எம்.தர்காவில் ரவுடிகள் அட்டூழியம் செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற காவலர் ராஜவேலுவை 10 பேர் கும்பல் சூழ்ந்து வெட்டியது.

இதில் 16 இடங்களில் வெட்டுப்பட்ட ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் நேற்று காலை முக்கியக் குற்றவாளியான அரவிந்தன் என்பவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆனந்தன் உள்ளிட்ட மேலும் சிலர் தலைமறைவானார்கள். அவர்களை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கிண்டி ஐஐடி அருகே ஆனந்தன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் போலீஸார் ஆனந்தனை கைது செய்யச் சென்றபோது பயங்கர ஆயுதங்களால் ஆனந்தன் போலீஸாரைத் தாக்கியுள்ளார்.

ஆனந்தன் தாக்கியதால் உதவி ஆய்வாளர் இளையராஜா காயமடைந்தார். பயங்கர ஆயுதங்களால் தாக்கியதால் போலீஸார் தற்காப்புக்காக ஆனந்தனை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் வெகு நாட்களுக்குப் பின்னர் ரவுடி ஒருவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.