#அஞ்சா_நெஞ்சர்_அழகிரி! அடிப்பாரா செஞ்ச்சுரி?

மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் அழகிரியின் போஸ்டர் இருந்த காலமும் உண்டு. அஞ்சா நெஞ்சர் முதல் ஆயிரமாயிரம் பட்டங்கள் தர தனியாக 11 பேர் கொண்ட குழுவே இருந்தது என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும்கூட செம்ம மாஸ் என்ற ரேஞ்சில் ரேஞ்ச் ரோவரில் உலா வந்தவர்.

சமீப காலமாக அழகிரியின் முகவரி அமைதி என்றே இருக்கிறது. அவ்வப்போது ஏதாவது சொல்வார். அதுவும் சில நாட்களில் நீர்த்துவிடும். ஆனால், இன்று அவர் மதுரை பாலமேட்டில் தொண்டர் இல்ல விழாவில் பேசியதற்கு கொஞ்சம் எஃபெக்ட் அதிகம். நேரடியாகவே ஸ்டாலினைத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது:
திமுகவில் உள்ளவர்கள் பதவிக்காகவே உள்ளனர் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். மதுரையிலிருந்து திருமண விழாவிற்கு வருகின்றேனா அல்லது கட்சி நிகழ்ச்சிக்கு வருகின்றேன் என்று தெரியாமல் எனக்கு வரவேற்பு பேனர்கள் மாலை மரியாதை அணிவித்து என் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது. திமுகவில் இப்போது உள்ளவர்கள் பதவிக்காகவே உள்ளனர் உண்மையாகவே கட்சிக்கு உழைக்காதவர்கள். செயல்படாத தலைவர் செயல் தலைவர் அவர் சென்னையில் உள்ளார். செயல்படுகிற வீரர்கள் இங்கு தான் பாலமேடு பகுதியில் தான் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த மாதமும் இதே தொணியில் அவர் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும், தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியும். உண்மையான தொண்டர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள்” என்றும் அவர் கூறியிருந்தார்.

தஞ்சாவூர் விழாவில் உதயநிதிக்கு நேரம் வரும்போது கட்சியில் பொறுப்பும் பதவியும் வரும் என்று ஸ்டாலின் பேசினார். அடுத்த நாள் ஸ்டாலின் சட்டப்பேரவைக்குச் சென்றார். இப்படி கட்சியில் உதயநிதி முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் சூழலில்தான் அழகிரி திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர் என இரண்டாவது முறையாக அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.