#வாழ்க_கலகம்! எழுத்தாளர்களுக்கிடையே நிகழும் மோதல்கள்? சிறப்புக்-கட்டுரை

இலக்கியக் கூட்டங்களில் நடக்கும் கலகங்கள்: வரலாற்றினூடே ஒரு பயணம்

அது 1980களின் தொடக்கம். இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் விரிவாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியப் போக்கைத் தீர்மானித்த நவீனத்துவ, பின்நவீனத்துவக் கோட்பாடுகள் அப்போதுதான் உருபெறத் தொடங்கியிருந்தன. தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், எழுத்தாளனின் மரணம், வாசகனின் பிரதி, மறுவாசிப்பு, கட்டுடைத்தல், கலகம், முதலான சொல்லாடல்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. அவற்றுக்கான விதைகள் ஊன்றப்பட்ட தருணம் அது.

விரிவடைந்த வாசகப் பரப்பு

எழுபதுகளில் தமிழ்ச் சிற்றிதழ்களின் வழியே ஊக்கம் பெற்ற இளம் தலைமுறை படைப்பாளிகளும் விமர்சகர்களும் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் போக்கை அடியோடு மாற்ற முற்பட்டார்கள். பா.செயப்பிரகாசம், பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், ஜெயந்தன், அஸ்வகோஸ், மேலாண்மை பொன்னுசாமி முதலான படைப்பிலக்கிய ஆளுமைகள் அதுவரை தமிழ் இலக்கியம் பயணிக்காத பாதைகளில் தமது பயணங்களைத் தொடங்கியிருந்தார்கள். இவர்களுடன், ஜெயகாந்தன், ஜானகிராமன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோரும், தங்களுடைய முன்னோடிகளின் இலக்கியத் தடத்திலிருந்து விலகி, குழப்பங்களால் சூழப்பட்டவையும், புதர்கள் மண்டியவையுமான அந்தப் பாதைகள் வாசகப் பரப்பை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு விரிவுபடுத்தின. தமிழகத்தின் பல்வேறு சிறு நகரங்களிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சிற்றிதழ்களின் எண்ணிக்கை மிக அதிகம். பிறகு அதுவே ஓர் இயக்கமாக உருவெடுத்தது. சிற்றிதழ் இயக்கம் எனப் பெயரெடுத்தது.

கலகச் செயல்பாடுகளின் தொடக்கம்

அந்த இயக்கமே உரையாடல்களை முன்னெடுத்த இயக்கம். சிறுசிறு குழுக்களாகத் திரண்டு உருவெடுத்த இயக்கங்கள் இலக்கிய உரையாடல்கள் சார்ந்து அதுவரை நிலவிவந்த மரபான போக்குகளைத் தயக்கமில்லாமல் மீறின. மேடைகளைத் துறந்து பள்ளி, கல்லூரிகளில் கிடைத்த சிறிய, அசௌகரியமான அரங்குகளிலும், பூங்காக்களிலும், கடற்கரைகளிலும், தெருமுனைகளிலும் கூடி மிகச் சுதந்திரமாக உரையாடத் தொடங்கியிருந்தார்கள். ஏழெட்டுப் பேர் கொண்ட கூட்டம். அதிகபட்சம் இருபது பேர் வரை தேறலாம். ஆனால், அவற்றின் வழியே நடைபெற்ற உரையாடல்களும் விவாதங்களும் காத்திரமானவை. தமிழ் இலக்கியத்தின் போக்கில் மாற்றத்தை உருவாக்குவதற்கான களன்களைச் செப்பனிட்டவை. சமரசமற்ற அத்தகைய உரையாடல்களில் அதுவரை கொண்டாடப்பட்ட தமிழின் முதன்மையான படைப்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்டன. எண்பதுகளில் தொடங்கிய இந்தப் போக்கு ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அப்போது உருவான கலகக்கார இளைஞர்கள் தமிழ் இலக்கியம் பேணி வந்த சபை நாகரிகத்தை அடியோடு குலைத்தார்கள். தமிழ் அறிவுத் துறை தளைகளிலிருந்து விடுபடுவதற்கு அது உதவியது என்றுகூடச் சொல்ல முடியும்.

இலக்கியவாதிகளின் கலகச் செயல்பாடு பல விதங்களில் நடந்தது. சாரு நிவேதிதா மதுரை சுப மங்களா நாடக விழாவில் நடத்திய நாடகத்தில் ஆபாசமான காட்சிகள் தென்பட்டதாகப் பார்வையாளர்கள் சிலர் அவரையும் அவரது குழுவினரையும் தாக்கியதாகச் செய்திகள் வந்தன. சென்னையில் மது விடுதியொன்றில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது சாரு நிவேதிதாவுக்கும் விமர்சகர் வளர்மதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வளர்மதி, சாரு நிவேதிதாவின் பல்லை உடைத்துவிட்டதாக இந்தியா டுடேயில் வந்த செய்தியொன்றும் நினைவுக்கு வருகிறது. 2000இன் தொடக்கத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டின்போது எழுத்தாளர் சுந்தர ராமசாமியைச் சிலர் அவமானப்படுத்த முற்பட்டதாக வந்த செய்தி அப்போதைய தீவிர இதழ்களில் விவாதத்திற்குள்ளானது.

1980 வாக்கில் தமிழ் இலக்கியத்தின் கலகச் செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராக அறியப்பட்டிருக்கும் விமலாதித்த மாமல்லன் பணி நிமித்தமாக ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தபோதுதான் அதுபோன்ற கலகச் செயல்பாடுகளை நேரடியாகக் காணும் வாய்ப்புப் பெற்றது. அவர் உடுத்தியிருந்த நீண்ட கதர் ஜிப்பாவும், தாடியும் அப்போதைய அப்பிராணியான ஈரோட்டு இலக்கிய நண்பர்களுக்குத் தொடக்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அவருக்கென்று ரசிகர்கள் உருவானார்கள்.

சென்னையில் விமலாதித்த மாமல்லனுக்கும் தருமு சிவராமுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது.

மாமல்லன் கவிதையொன்றை எழுதி அதை தருமு சிவராமிடம் வாசிக்கக் கொடுத்தாராம். சிவராமு அதைக் கவிதையென்று ஒப்புக்கொள்ளவில்லையாம். மாமல்லன் சும்மா விடவில்லையாம். ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சிவராமு மீது புகார் ஒன்றைக் கொடுத்தாராம். மண்டையைப் பிய்த்துக்கொண்ட காவல் அதிகாரி சிவராமுவை அழைத்து சார் நீங்கள்தான் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அவரது கவிதைகளைக் கவிதைகள்தாம் என ஏற்றுக்கொள்ளக் கூடாதா? எங்களுக்கிருக்கும் வேலைச் சுமைகளுக்கிடையில் இந்த வழக்கை எப்படி கையாள முடியும் என அழாக்குறையாகக் கெஞ்சினாராம். மேற்குறிப்பிட்ட சம்பவம் புனைவா, நிஜமா எனத் தெரியாது. ஆனால், தமிழ் இலக்கியவாதிகளின் கலகச் செயல்பாடுகள் சார்ந்து இதுபோன்று உலவி வந்த எண்ணற்ற புனைவுகள் உண்டு.

ஆனால், இந்தக் கலகச் செயற்பாட்டாளர்கள் இல்லாமல் இலக்கியக் கூட்டங்கள் களைகட்டுவதில்லை.

கலகமும் பகடியும்

சென்னையில் காலச்சுவடு ஒருங்கிணைத்த தமிழினி 2000 மாநாட்டில் அதுபோன்ற கலகச் செயல்பாடுகள் சில நடந்தன. நான் தங்கியிருந்த அறையிலேயே கலகங்கள் நடைபெற்றன. நான்கைந்து இளம் படைப்பாளிகளின் கலகச் செயல்பாடுகளை எதிர்கொள்ள முடியாமல் நான் இரவு முழுக்கத் திண்டாடினேன். கடைசியில் காவல் துறையில் புகாரளிப்பேன் என மிரட்ட வேண்டிய அளவுக்கு நிலைமை கைமீறிப் போனது. மாநாட்டு அரங்கிற்கு வெளியே தமிழின் முன்னோடி எழுத்தாளர்களை வம்பிக்கிழுத்து பாடல்கள் பாடிக் கேலி செய்வதற்கென்றே குழுமியிருந்தார்கள். இளைஞர்களின் கலகச் செயல்பாடுகளை மூத்த எழுத்தாளர்கள் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு ரசிப்பதும் உண்டு. மாநாட்டின்போது இட்டுக்கட்டி பாடப்பட்ட பாடல்களைப் பலரும் ரசித்தார்கள்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு:

அப்போது மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அ.மார்க்ஸ் தலைமையிலான குழு ஒன்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. கீழ்க்கண்ட பாடல் அ.மார்க்ஸ் கண்ணனை நோக்கிப் பாடுவதாக அமைக்கப்பட்டது,

கண்ணா நீயும் நானுமா?

மாநாட்டில் பின்நவீனத்துவம் பற்றிய கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் க.பூர்ணசந்திரனுக்கான பாடல் இது,

ஒண்ணுமே புரியலை, உலகத்திலே

எவ்வளவு குறும்பு பாருங்கள்.

இந்தக் குறும்புகள் சில சமயங்களில் அத்துமீறிவிடும்போதுதான் யாராவது காயம்பட நேர்கிறது.

களேபரமான கூட்டங்கள்*

1990களின் தொடக்கம் என நினைக்கிறேன், ஈரோட்டில் பழமலையின் கவிதைத் தொகுதி ஒன்றின் வெளியீட்டு விழா. கவிஞர் அக்னிபுத்திரன் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் உரையாற்றுவதற்காக அ.மார்க்ஸ், கோவை ஞானி உள்ளிட்ட பல ஆளுமைகள் ஈரோடு வந்திருந்தனர். எனக்கும் அப்போது ஈரோட்டில் இருந்த கௌதம சித்தார்த்தனுக்கும் பழமலையின் அந்தத் தொகுப்புப் பிடிக்கவில்லை. ஆனால், மற்றவர்கள் அதைப் பெரிதாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். நானும் சித்தார்த்தனும் ஏதாவது குறும்பு செய்ய நினைத்தோம். பழமலையின் கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அக்னிபுத்திரனிடம் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகக் கேட்டோம். அவை சுமாரான கவிதைகள்தாம். ஆனால், புதிதாக முயற்சி செய்திருக்கிறார் என்பதால் பாராட்ட வேண்டியிருக்கிறது என்றார்.

கூட்டத்தில் பேசிய ஞானி உள்ளிட்ட எல்லோரும் பழமலையின் அந்தத் தொகுப்பை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்கள். அக்னிபுத்திரன் எங்களிடம் சொன்னதற்கு மாறாக அவரது கவிதைகள் மகத்தானவை என்பது போல் பேசினார். எனக்குக் கடும் கோபம். நேராக மேடைக்குப் போய்விட்டேன். அக்னிபுத்திரன் நேர்ப் பேச்சில் சொன்னதைச் சொல்லி மேடையில் இப்படி ஏன் பேச வேண்டும் எனக் கேட்டேன். தான் அப்படிச் சொல்லவே இல்லை என மறுத்தார். நான் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த கௌதமச் சித்தார்த்தனையும் அப்போது அருகிலிருந்த வேறு இருவரையும் சாட்சிக்கு அழைத்தேன்.உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஞானியை முகஸ்துதி செய்கிறார் என்றுகூட விமர்சித்தேன்.

பெரிய களேபரமாகிக் கூட்டம் பாதியிலேயே நின்று விட்டது.

பிறகு எல்லோருமாகச் சேர்ந்து அருகிலிருந்த டீக்கடை ஒன்றுக்குப் போய் டீ குடித்து, தம் அடித்தவுடன் நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பியது. கூட்டமும் தொடர்ந்து நடைபெற்றது. மார்க்ஸ் என் கேள்விகளில் இருந்த நியாயங்களைப் பற்றிப் பேசினார். முகஸ்துதியாளர் என விமர்சித்ததற்காக நான் ஞானியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

அதே போல் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலுக்காக ஈரோட்டில் நடந்த விமர்சனக் கூட்டமொன்றிலும் ரகளை ஏற்பட்டது. அப்போது ஈரோட்டில் எந்த இலக்கியக் கூட்டம் நடைபெற்றாலும் கடைசியில் அடையாளத்திற்காகவாவது கொஞ்சம் ரகளை நடக்கும்.

பத்துப் பைசாவும் தகர டப்பாவும்

90களில் நடைபெற்ற கலகச் செயல்பாடுகளை பாண்டிச்சேரியிலிருந்து வந்துகொண்டிருந்த ஊடகம் என்னும் சிற்றிதழ் தன்னுடைய அடையாளமாகவே மாற்றிக்கொண்டு செயல்பட்டது. அ.ராமசாமி, ரவிக்குமார் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டிருந்த அவ்விதழ் இலக்கியவாதிகளுக்கு டகம் விருதும் பட்டயமும் வழங்கிக் கௌரவித்தது. விருதுக்கான தொகை பத்துப் பைசா, பட்டயம் தகரத்தாலானது. அப்போது நான் ‘கண் விழித்த மறுநாள்’ என்னும் தலைப்பில் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருந்தேன். என்ன காரணத்தாலோ கொஞ்சம் பேர் அந்தக் கவிதைத் தொகுதியைக் கவிதைத் தொகுதிதான் என ஏற்றுக்கொண்டார்கள். அந்தத் தொகுப்புக்குப் பத்துப் பைசாவையும் தகரப் பட்டயத்தையும் டகம் விருதாக அறிவித்திருந்தது. அதைப் பார்த்த மறுநாளே எனக்கு உடனடியாகப் பத்துப் பைசாவையும் தகரப் பட்டயத்தையும் அனுப்பி வைக்குமாறு கேட்டு ஆசிரியர் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். இன்றுவரை அந்தப் பத்துப் பைசாவும் தகரப்பட்டயமும் வந்து சேராததில் எனக்கு வருத்தம்தான்.

ஊடகத்தின் கலகச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மற்றொன்று பிசாசு எழுதும் என்னும் பெயரில் தமிழின் முக்கியமான கவிஞர்களின் பெயரில் வெளியிடப்பட்ட கவிதைகள்தாம். பசுவய்யா, பழமலை, விக்கிரமாதித்தியன் என ஏறத்தாழப் பத்துப் பன்னிரண்டு பேரின் அந்தக் கவிதைகளில் பல சம்பந்தப்பட்ட கவிஞர்களின் கவிதைகளின் மீதான பகடிதான். படித்தால் கொஞ்சம் கோபம் வரும். ஆனால், அதை மிஞ்சி அந்தப் பகடி புன்னகையை வரவழைத்துவிடும்.

பட்டம் பெற்ற படைப்பாளிகள்

காலச்சுவடு எழுத்தாளர்களுக்குப் பட்டப் பெயரெல்லாம் வைத்தது. இலக்கணத்தின் மீது தீராக் காதல் கொண்ட நஞ்சுண்டனுக்கு சீத்தலைச் சாத்தனார் பட்டம், எந்தக் குழுவையும் சேராத கலகக்காரர் அ.ராமசாமிக்கு மூன்றாம் மனிதர் பட்டம், கவிஞர் தேவேந்திர பூபதிக்கு ஒயின் ஓரி. அப்போது நான் பிரபலமாக இல்லாததால் எனக்கு எந்தப் பட்டமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பட்டப் பெயர்கள் சம்பந்தப்பட்டவர்களைப் புண்படுத்தியதாகத் தெரியவில்லை. உங்களுக்கு நினைவிருந்தால் அந்தப் பட்டப் பெயர்களைச் சொல்லியேகூட அவர்களை அழைக்க முடியும்.

காணாமல்போன பகடி

ஆனால், அவை போன்ற கலகச் செயல்பாடுகளுக்கான இடம் கொஞ்சம் கொஞ்சமாக அருகிக் கடைசியில் இல்லாமலேயே போனது. கேலிக்கும் கிண்டலுக்கும் பகடிக்கும் இடமில்லாமல் போனது. இப்போது கூட்டங்கள் ஒழுங்காக நடக்கின்றன. வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை, கருத்துரை, நன்றியுரை எனக் கூட்டங்கள் சரியான நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் முடிந்துவிடுகின்றன. மாற்றுக் கருத்துடையவர்கள் கூட்டங்களுக்கு வருவதையேகூடத் தவிர்த்துவிடுகிறார்கள். கூட்டங்கள் அலுப்பூட்டும்விதத்தில் தொடங்கி, அலுப்பூட்டும்விதத்தில் தொடர்ந்து அலுப்பூட்டும்விதத்திலேயே முடிந்துவிடுகின்றன.

பெருந்தேவியின் கவிதைகள் பற்றிய திருச்சிக் கூட்டம் இவ்வளவு பிரபலமானதற்கு அங்கே நடைபெற்றதாகக் கூறப்படும் கலகச் செயல்பாடுகள்தாம் காரணமாக இருக்கலாமோ என எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என். கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: devibharathi.n@gmail.com)

நன்றி-தேவி பாரதி அவர்களே…

நன்றி- மின்னம்பலம்.காம்