சத்துணவு முட்டை ஊழல்? டென்ட்டர் ரத்தின் பின்னனி!

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் அரசின் முட்டை டெண்டரில் பங்கேற்க பண்ணையாளர்கள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 9 மணி நேர இழுபறிக்கு பிறகு முட்டை டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு, பருப்பு சப்ளை செய்து வரும் திருச்செங்கோட்டை சேர்ந்த `கிறிஸ்டி புட்ஸ்’ நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் கடந்த 5ம் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் 500 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். திருச்செங்கோடு, சேலம், கோவை, திருப்பூர், சென்னை, நாமக்கல், பெங்களூரு என 75க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை கடந்த 9ம் தேதி முடிவடைந்தது.

பல ஆயிரம் கோடிக்கு கிறிஸ்டி புட்ஸ் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது சோதனையில் அம்பலமாகியுள்ளது.இதுதொடர்பாக, பல்வேறு ஆவணங்களை கடிதமாகவும், பென் டிரைவாகவும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக நடத்திய சோதனையில் கிறிஸ்டி நிறுவனத்தில் இருந்து கணக்கு காட்டப்படாமல் இருந்த ரூ.17 கோடி பணம், 10 கிலோ தங்கம் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. திருச்செங்கோடு வட்டூரில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் குமாரசாமி வீடு, ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியை சென்னையில் இருந்து திருச்செங்கோடு அழைத்து வந்து கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் வரிஏய்ப்பு தொடர்பாகவும், அமைச்சர்களுக்கு கைமாறிய லஞ்சப்பணம் தொடர்பாகவும் விசாரித்தனர். இதற்கு குமாரசாமி சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் கடந்த 9ம் தேதி இரவு 8 மணிக்கு சோதனையை முடித்துக் கொண்டு புறப்பட்டனர். 5 கார், ஒரு டெம்போ டிராவலரில் ஆவணங்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையால், தற்போது தமிழக அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் 3 பேர் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு பல கோடி கைமாறியுள்ள தகவல் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ளது. இதேபோல் பெண் ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்ட உயரதிகாரிகள் பலருக்கும் பணம் சென்றுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு ெசய்துள்ளனர்.

இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டி நாமக்கல்லை சேர்ந்த முன்னணி கோழி பண்ணையாளர்கள் சிலரும் வருமானவரித்துறைக்கு அனுப்பியுள்ளனர். சத்துணவு முட்டை டெண்டர் கிடைக்காத ஏமாற்றத்தில் முன்னணி கோழி பண்ணையாளர்கள் இந்த திடீர் நடவடிக்கையில் இறங்கியதாகவும், இதையடுத்தே சோதனை தீவிரப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 5 நாட்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ளதை தொடர்ந்து இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்த கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் குமாரசாமி, சத்துணவு முட்டை சப்ளை விநியோகத்தை மேற்கொள்ளும் மேலாளர், நிதி மேலாளர், நிறுவனத்தின் ஆடிட்டர்கள், துணை நிறுவனங்களின் அதிகாரிகள் என 50 பேருக்கு சம்மன் அனுப்ப வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில், சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்குவதற்கான டெண்டர் நேற்று சென்னை, தரமணியில் உள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்யும் டெண்டருக்கு 6 நிறுவனங்கள் டெண்டர் கோரி இருந்தது. அதன்படி, கிறிஸ்டி குரூப் சார்பில் நேச்சுரல் புட்ஸ், சுவர்ண பூமி, கிஷான் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஸ்ரீதர் பாபு சப்ளையர், ஸ்ரீமாருதி ஆக்ரோவ், நாமக்கல் சொசைட்டி நிறுவனங்கள் என மொத்தம் 6 கம்பெனிகள் டெண்டர் கோரி இருந்தன.

இதில் டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள், தினசரி 55 லட்சம் முட்டைகள் சப்ளை செய்ய வேண்டும். இதற்காக 3 கம்பெனிகளுக்கு டெண்டர் வழங்கப்படும். டெண்டர் மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி, பலகோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று சமூகநலத்துறை சார்பில் சத்துணவு திட்டத்துக்கான முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் பங்கேற்க கூடாது என்று பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டெண்டர் திறப்பு நேற்று காலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், நேற்று மாலை 6.15 மணிக்கு டெண்டர் கோரிய 6 நிறுவன அதிகாரிகளை உள்ளே அழைத்து சமூகநலத்துறை அலுவலகத்தின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர் முன்னிலையில் டெண்டர் திறக்கப்பட்டது.

ஆனால், டெண்டர் கோரிய 6 பேரின் டெண்டரையும் அதிகாரிகள் ஒவ்வொரு காரணங்களை கூறி ஏற்க மறுத்துவிட்டதுடன், சத்துணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதல் டெண்டரையும் நேற்று அதிரடியாக ரத்து செய்தனர். இதன்மூலம் இனி மீண்டும் டெண்டர் கோரப்படும். நேற்று டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு கிறிஸ்டி நிறுவனம் மீது நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட பல கோடி ரூபாய் முறைகேடுதான் காரணம் என்று சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. இதற்காக மட்டும் வாரம் சுமார் 3 கோடி முட்டை சப்ளை செய்ய வேண்டும். சுமார் 100 கோழி பண்ணையாளர்கள் இந்த முட்டையை சப்ளையை செய்து வருகிறார்கள். இந்த பண்ணையாளர்கள் அனைவரிடம் இருந்துதான் கிறிஸ்டி நிறுவனம் மொத்தமாக முட்டையை பெற்று சத்துணவு மையங்களுக்கு அனுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

டெண்டர் ரத்து ஏன்?

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்காக முட்டை சப்ளை செய்ய டெண்டர் ேகாரி இருந்த நாமக்கல் சொசைட்டி அதிகாரி பாலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டு இருந்தது. எங்கள் நிறுவனம் உள்பட 6 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தோம். நேற்று காலை 11 மணிக்கு டெண்டர் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக காலம் தாழ்த்தி, மாலை 6.30 மணிக்குதான் டெண்டர் திறக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பம் செய்ய 6 நிறுவனங்களின் டெண்டர்களும் ஏதாவது ஒரு காரணம் கூறி நிராகரிக்கப்பட்டு விட்டன.

இதனால் நாங்கள் அதிக ஏமாற்றம் அடைந்துள்ளோம். இனி தமிழக அரசு புதிதாக டெண்டர் அழைப்பு விடுக்கும். இதற்கு சில வாரங்கள் ஆகலாம். தற்போது, சத்துணவு திட்டத்துக்காக முட்டை வழங்கும் நிறுவனங்களிடம் வருமான வரி துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதன் காரணமாகவே முட்டை டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.