ஒரே நாடு-ஒரே தேர்தல்! ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது!

ஒரு நாடு; ஒரு தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம், பல்வேறு கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் கமிஷன், ‘இத்திட்டத்தை நிறைவேற்ற, கூடுதல் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு போட்டதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களுக்காக, 4,555 கோடி ரூபாய் தேவை’ என, தெரிவித்துள்ளது.

‘நாடு முழுவதும், லோக்சபாவுடன், மாநிலங் களின் சட்டசபைகளுக்கும் சேர்த்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ‘அதனால், மக்கள் பணம் வீணாவது தடுக்கப்படும்’ என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ‘ஒரு நாடு; ஒரு தேர்தல்’ கருத்து வலுப்பெற்று வருவதால், அது தொடர்பாக பிற கட்சிகளின் கருத்தை, சட்ட கமிஷன் சமீபத்தில் கேட்டறிந்தது. இதற்கிடையே, மத்திய சட்ட அமைச்சகம், இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை கேள்விகளாக்கி, பட்டியல் தயாரித்துள்ளது.

இது, சட்ட கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் கமிஷனுக்கும் கேள்வி பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது; இதற்கு, தேர்தல் கமிஷன் அளித்துள்ள பதில் விபரம்:

தற்போதுள்ள நிலவரப்படி, பழுதடைந்துள்ள, 71 சதவீத ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 25 சதவீத, கட்டுப்பாட்டு சாதனங்கள், ஓட்டு போட்டதற்கான ஒப்புகை சீட்டு அளிக்கும் இயந்திரங்களில், 35 சதவீதம் மாற்றப்பட வேண்டும். குறைந்தபட்ச தேவையாக, ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 36 லட்சத்துக்கு மேல் தேவைப்படுகின்றன. கட்டுப்பாட்டு சாதனங்கள் 26 லட்சத்துக்கும் அதிகமாக தேவைப்படுகின்றன.

ஓட்டு போட்டதற்கான ஒப்புகை சீட்டு அளிக்கும் இயந்திரங்கள், 28 லட்சத்துக்கும் அதிகமாக வாங்கப்பட வேண்டும். ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், இரு ஜோடி, மின்னணு ஓட்டு இயந்திரங்கள் தேவை.

இதனால், கூடுதலாக, 12.9 லட்சம் ஓட்டு இயந்திரங்கள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு சாதனங்கள், 12.3 லட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

இதற்கு, கூடுதலாக, 4,555 கோடி ரூபாய் செலவாகும். இந்த இயந்திரங்களை வைத்து, 15 ஆண்டுகள், அதாவது, 2034 வரை, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முடியும். அதன்பின், ஓட்டுப் பதிவு தொடர்பான அனைத்து இயந்திரங்களும் புதிதாக வாங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலின் போதும், 15 சதவீதம் கூடுதல் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படும் சூழ்நிலை இருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களை வைத்து, இது கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

கூடுதல் ஓட்டுச்சாவடி! வரும், 2019ல், ஒரே சமயத்தில் அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட்டால், 14 சதவீத ஓட்டுச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 2024ல், இரண்டாம் முறையாக, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்படும்போது, 12.1 லட்சம் ஓட்டுச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும் என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. வரும், 2024ல், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த, கூடுதல் ஓட்டு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் வாங்க, 1,751 கோடி ரூபாய் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.

மூன்றாம் முறையாக, 2029ல், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்படும்போது, ஓட்டு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் வாங்க, கூடுதலாக, 2,015 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. வரும், 2034ல் நடக்கும் தேர்தலுக்கு, 13 ஆயிரத்து, 982 கோடி ரூபாய் செலவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், இயந்திரங்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து, பராமரிப்பு, பாதுகாப்பு செலவினங்கள் சேர்க்கப்படவில்லை.
சிறந்த மாற்று வழி! ‘ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதால், பணம் மிச்சமாகுமா?’ என்ற, சட்ட அமைச்சகத்தின் கேள்விக்கு, ‘புதிய இயந்திரங்கள் வாங்குவதால், கூடுதல் செலவாகும்; தேர்தலுக்கு பின், இந்த இயந்திரங்களை பாதுகாத்து வைப்பதற்கான செலவும் ஏற்படும்’ என, தேர்தல் கமிஷன் பதில் அளித்து உள்ளது. அதேசமயம், ‘ஒரே ஆண்டில் பல தேர்தல்கள் நடத்தப்படுவதை தவிர்க்க, குறிப்பிட்ட ஒரு ஆண்டில், குறிப்பிட்ட ஒரு சமயத்தில் தேர்தல்களை நடத்துவது, சிறந்த மாற்று வழியாக இருக்கும்’ என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

வருகின்ற டிசம்பரில் முடியும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம்,சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களின் தேர்தலுடன் மேலும் ஏழு மாநில தேர்தல்களையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடத்த மத்திய சட்ட அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு அதற்குரிய சட்ட மசோதாக்களை தயார்செய்து வருகிறது.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், வரும், 18ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 10 வரை நடக்கவுள்ளது. வார விடுமுறை நாட்களை தவிர்த்து, மொத்தம், 18 நாட்களுக்கு, லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் அலுவல்கள் நடக்கவுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்து அளிக்க வகை செய்யும் மிக முக்கிய மசோதா, இந்த கூட்டத் தொடரில் நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு :

இதுதவிர, முத்தலாக் மசோதா, மூன்றாம் பாலினத்தினருக்கான மசோதா உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மசோதாக்களும், ஆறு அவசர சட்ட மசோதாக்களும் (ஒரேநாடு ஒரே தேர்தல்), மத்திய அரசின் கைகளில் உள்ளதால், இந்த கூட்டத் தொடர், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ரீதியாக பார்த்தாலும், மிகப் பெரும் புயல் வீசுவதற்கான, அத்தனை அடையாளங்களும் தென்படுகின்றன.

முன்னதாக சில தினங்களுக்கு முன் தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித்ஷா ஊழல் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் என பேசியது குறித்து பல்வேறு அரசியல் நோக்கர்களும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்துக்கும் தேர்தல் வருவதற்குண்டான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்…