அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை!

அதிமுக அரசை ஊழல் அரசு என அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 9-ம் தேதி சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் பாஜக ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் களையப்படும். சட்டம் ஒழுங்கு முறையாகக் கையாளப்பட்டு பிரச்சினைகள் சரிசெய்யப்படும். தமிழக்தில் புதிய நண்பர்களுடன் கூட்டணி ஏற்பட்டால், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். இதற்குத் தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்” என்றார்.

இதன்மூலம் அதிமுக அரசைத்தான் அவர் குற்றம் சாட்டினார் என்று விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ”அமித் ஷா அதிமுக அரசை நல்லதாக சொல்லியிருந்தாலும் அவர் பேச்சை மொழிபெயர்ப்பு செய்த ஹெச்.ராஜா மாற்றிச் சொல்லியிருப்பார். ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதைத்தான் ஊழல் என்று அமித் ஷா சொல்லியிருப்பார். அரசையோ குறிப்பிட்ட துறையையோ அவர் சொல்லவில்லை” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

”இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்த அமித் ஷா இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். 1. இன்றுள்ள நிலையில் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவே திட்டமிடுகிறது என்ற யதார்த்த நிலை. 2. தேர்தலுக்குப் பின் அமைய உள்ள, பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி குறித்த தெளிவு.

தமிழகத்தில் ஏதோ ஒரு கட்சியோ, அதிமுக அரசோ மட்டும் ஊழல் எனக் குறிப்பிடவில்லை. காரணம் ‘திமுக + காங்கிரஸ்’அதிமுகவுக்கு மாற்றல்ல; அவர்களும் ஊழல்வாதிகள்; தேர்தலில் வாக்கு பெற பணம் தரும் விபரீதம் அதிலும் அதிகம். எனவே ‘மாற்று என்பது தனிநபரோ, கட்சியோ, கூட்டணியோ அல்ல. ஆட்சியின் தன்மையும், நடைமுறையும் மாற வேண்டும்.இன்றுள்ள ஊழல் மயமான நிலைக்கு, “ஊழலற்ற நிர்வாகமே மாற்று” என்பது தான் அமித் ஷா தெரிவித்த கருத்தின் விளக்கம்” என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.