இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி1617 கொரோனா வைரஸ் திரிபால் சிங்கப்பூரில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அத்தகைய கொரோனா திரிபுகள் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

அண்மைய சில தினங்களாக சிங்கப்பூரில் சமூக அளவில் கோவிட்-19 தொற்று பரவுவது சற்று கூடியுள்ளதையடுத்து, அதைத் தடுக்கும் விதமாகக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இந்நிலையில், சிங்கப்பூரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப, உயர்நிலை, ஜூனியர் கல்லூரிகள் மே 19 முதல் மே 28ஆம் தேதி வரை மூடப்படும் என அந்நாட்டுக் கல்வி அமைச்சு அறிவித்தள்ளது. வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், யாருக்கும் கவலைப்படத்தக்க பாதிப்புகள் இல்லை என்றும் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing), தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் உள்ளூர் தொற்றின் மூலமாக 38 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஓராண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்லாமல், ஒரே நாளில் பதிவான அதிகமான சமூகத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவாகும். இவற்றுள் 18 நோய்த்தொற்றுச் சம்பவங்களுக்கான காரணம் தெரியவில்லை. மேலும் கடந்த வாரம் 10 குழந்தைகளுக்கு கிருமித்தொற்று கண்டறியப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட 38 பேரில் நான்கு குழந்தைகளும் அடங்குவர். இந்தத் தொற்றுத் திரள் (கிளஸ்டர்) டியூஷன் மையம் ஒன்றில் இருந்து உருவாகி உள்ளது. இதே வேளையில், சிங்கப்பூரில் உருமாறிய கோவிட்-19 கிருமி வகை உருவாகியிருப்பதாக இணையத்தில் வலம் வரும் செய்தியை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. B1617 வகை கொரோனா திரிபுதான் குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதாக கருதப்படுகிறது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

By Anna