இன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” ! முழங்குமா? முடங்குமா?

‘பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று(ஜூலை 18) துவங்குகிறது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது:

இரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். பார்லி., கூட்டத்தொடரை மக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, பார்லி., கூட்டத்தொடரை, மக்களுக்கு பயனுள்ளதாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை கூட இருக்கிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
மக்களவை பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு காலமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தங்கள் ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்த கூட்டத் தொடரைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றன. அதே நேரத்தில் ஆளும் தரப்பு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய நிலையிலும், எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவி:

மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக் காலம் கடந்த 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. எனவே, புதிய துணைத் தலைவர் இந்தக் கூட்டத் தொடரில் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இந்த விவகாரத்தில் இதுவரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் அப்பதவியில் இருக்க வேண்டும் என்று கருதுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸால் முடியவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை நிறுத்தும் என்று தெரிகிறது. மாநிலங்களவையில் தனிப் பெரும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியும் வேட்பாளரை நிறுத்த இருக்கிறது. எனினும், பாஜக கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய மசோதாக்கள்:

திவால் சட்ட மசோதா 2018 உள்பட 18 புதிய மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளன. இது தவிர ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட 25 மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. 3 மசோதாக்கள் திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா, முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா, திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய மசோதாக்களாகும்.

பாராளுமன்றத்தை முடக்குவோம்!

இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தன் கருத்தை ஒத்த கட்சிகளின் ஆதரவு கோரப்படும் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது

ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியும், பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்றைய தினம் மக்களவை செயலரிடம் மனு அளித்துள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் ஆதரவைக் கோரி வருகிறது தெலுங்கு தேசம் கட்சி. சென்னையில் நேற்று திமுக எம்.பி. கனிமொழியைச் சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு திமுக எம்.பி.க்கள் ஆதரவு தர வேண்டும் என தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துச் சென்றனர். முன்னதாக சிவசேனா கட்சியைச் சந்தித்து தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு கோரியது.

இந்நிலையில், இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடர் எந்தவிதமான கூச்சலும் குழப்பமும் இன்றி அமைதியாக, ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் தனியாக மக்களவைச் செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து இன்று மனு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ”வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய விஷயங்களை விவாதிக்க இருக்கிறது. குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைத் தவறாகப் பயன்படுத்தியது, எஸ்சி, எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திருத்தம், விவசாயிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முயற்சி, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் புறந்தள்ளிவிட்டு, அரசின் நிறுவனங்களில் தங்களுக்கு தேவையானவர்களை நியமிக்கிறது, பெட்ரோல், டீசல் விலையையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது குறித்து அவையில் கேள்வி எழுப்புவோம்.

மோடியின் ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது, இதன் காரணமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது.

பணமதிப்பு நீக்கம் காலத்தில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் ரூ.750 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இந்தக் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்களில் ஒருவராக பாஜக தலைவர் அமித் ஷா இருந்து வருகிறார். இது குறித்து விவாதிப்போம்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதில் முக்கியமாக, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தும் அதைச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.