நம்பிக்கையில்லாத் தீர்மானம்! வியூகம் வகுக்கும் பாஜக!

மக்களவையில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் பாஜக திடீரென ஏற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சித் தலைவர் அமித் ஷா மாற்றியுள்ளதாக தெரிகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது.

இதன்படி, தெலங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ் ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்திருந்திருந்தார். அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

நாடாளுமன்ற கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முயன்றபோது, ஆளும் கட்சி தரப்பில் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த முறை உடனடியாக அதை ஏற்றுக் கொண்டது எதிர்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் தீர்மானம் தோல்வியடையவே வாய்ப்பு. அதேசமயம் இந்த வாக்கெடுப்பின் மூலம் தங்களின் ஒற்றுமையை நிருபிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன. இதையே தங்களுக்குரிய வாய்ப்பாக ஆளும் பாஜகவும் எண்ணுகிறது. எதிர்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதை காட்டவும், அரசுக்கு ஆதரவாக உள்ள நடுநிலை கட்சிகளின் நிலைப்பாட்டை உணர்த்தவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பாஜக தலைவர் அமித் ஷா வியூகம் வகுத்து வருகிறார்.

மக்களவையில் மொத்தம் 544 உறுப்பினர்கள் உள்ளபோதிலும் தற்போது 534 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். எனவே 268 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் தீர்மானம் தோல்வியடைந்து அரசு வெற்றி பெற்று விடும். பாஜகவுக்கு மட்டும் 273 எம்.பிக்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 41 பேர் உள்ளனர். இதன் மூலம் 314 எம்.பி.க்களின் எண்ணிக்கையுடன் தீர்மானம் தோற்கடிக்கப்படும்.

லோக்சபா
———–
மொத்த எம்.பி.,க்கள் – 544
தற்போது எம்.பி.,க்கள் – 534
காலியிடம் – 10
————
தேசிய ஜனநாயக கூட்டணி – 314
பா.ஜ., – 273
பா.ஜ., ஆதரவு கட்சிகள் – 41
—————
எதிர்க்கட்சிகள் – 147
காங்., – 48
திரிணமுல் காங்., – 34
தெலுங்கு தேசம் – 16
————
யாருடனும் சேராத கட்சிகள் – 73
அ.தி.மு.க., – 37
பிஜூ ஜனதா தளம் – 20
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி – 11
இந்திய தேசிய லோக் தளம் – 2
சுயேச்சை எம்.பி.,க்கள் – 3

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளுக்கு, 147 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. இவர்களை தவிர அதிமுக, பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட எந்த அணியிலும் சேராத கட்சிகளைச் சேர்ந்த 73 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவை பெறுவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

அதேசமயம் அவர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய பாஜக தலைமை வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. உள்ளூர் அரசியல், காங்கிரஸ் எதிர்ப்பு போன்ற காரணங்களால் நடுநிலை வகிக்கும் கட்சிகள் எதிர் அணியில் சேர தயங்குகின்றன. இந்த கட்சிகள் பெரும்பாலும் நடுநிலை வகிக்கவே விரும்புகின்றன. எனினும் சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பிற கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதுபோலவே பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என பாஜக வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன. மக்களவை தேர்தலுக்கு குறைவான காலமே உள்ள நிலையில் பாஜகவுடன் வீண் முரண்டு பிடிப்பதை சிவசேனா தவிர்க்க கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, எதிர்கட்சிகளை கடுமையாக சாடவும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களை பேசவும் பாஜக தரப்பு திட்டமிடுகிறது. தீர்மானத்திற்கு பதிலளித்து பேசும்போது பிரதமர் மோடி கடுமையான சாடல்களை முன் வைப்பார் என தெரிகிறது. இதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாடாளுமன்றத்திலேயே மேற்கொள்ளும் வகையில் பாஜக தலைவர்களின் பேச்சு அமையும் எனவும் எதிர்பார்க்கின்றனர்

இந்நிலையில்

இந்நிலையில் தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி திவாகர் ரெட்டி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மத்திய அரசின் நடவடிக்கை, தெலுங்குதேச கட்சியின் செயல்பாடுகள் இரண்டுமே எனக்கு அயற்சியை ஏற்படுத்தி விட்டன. மக்களவையில் ஆளும் கட்சிக்கு போதிய அளவு பெரும்பான்மை உள்ளது. நாங்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எப்படியும் தோற்கடிக்கப்பட்டு விடும். எனவே நான் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிப்பது முக்கியமல்ல. நான் போனாலும் போகாவிட்டாலும், தீர்மானம் தோற்ப்பது உறுதியாகி விட்டது.

எனக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. எனவே மக்களவைக்கு செல்வதில்லை என நான் முடிவு செய்துள்ளேன். தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எங்கள் கட்சி கொறாடா உத்தரவு பிறப்பித்துள்ளதை பற்றி நான் கவலைப்படவில்லை. அது ஒரு பொருட்டே அல்ல என்றும் கூறியுள்ளார்.