“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார்.
ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக (தீர்மானத்துக்கு ஆதரவாக) ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்று அப்போது அவர் கூறினார். அத்துடன் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-
பாரதீய ஜனதா மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பல மாநிலங்களில் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து உள்ளது. முன்பு பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் அதில் இருந்து விலகிவிட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் சிவசேனாவும் பாரதீய ஜனதாவை கைவிட்டு விட்டது.
எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடையும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்துள்ள போதிலும், அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும்.
ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டாட்சி முன்னணி என்ற புதிய அணியை தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நடைபெற இருக்கும் பிரமாண்ட பேரணிக்கு அந்த கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். மத்தியில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பணிகளை இந்த மாதமே தொடங்க இருக்கிறோம். இது அடுத்த மாதத்தில் இருந்து தீவிரம் அடையும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லியில் தெரிவித்தார்.

இது தொடர்பாக தில்லியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு ஆந்திரத்தை வஞ்சித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். இதற்கு அண்டை மாநிலமான தமிழ்நாடு தார்மீக அடிப்படையில் ஆதரவு அளித்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாநில உரிமைகளுக்காக ஒரு மாநிலம் போராடும்போது, அதற்கு அண்டை மாநிலம் ஆதரவு அளிப்பதுதானே முறை?

இந்த நேரத்தில், ஜெயலலிதா, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என நம்புகிறேன். ஏனென்றால், மாநில உரிமைகளில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். மத்திய அரசால் மாநில உரிமைகள் மறுக்கப்பட அவர் அனுமதித்திருக்க மாட்டார்.

அண்டை மாநிலத்தின் தார்மீக குரலுக்கு அவர் ஆதரவளித்திருப்பார்.அண்டை மாநிலங்கள் நட்புறவாக இருக்க வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு மீது எனக்கு வெறுப்புணா்வு இல்லை. ஆனால், அவர்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஏனென்றால், இன்று ஆந்திரத்துக்கு நடப்பது நாளை தமிழகத்துக்கு நடக்கலாம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்” என்றார் அவர்.