18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

சென்னை : சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று(ஜூலை 23) முதல் மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன் விசாரிக்கிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள், விசாரணை நடைபெற உள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். ‘பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்’ என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று அறிவிக்க மற்றொரு நீதிபதியான சுந்தர், செல்லாது என்று மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டார். ஆனால், தினகரன் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால், மூன்றாவது நீதிபதி விமலாவுக்குப் பதிலாக சத்திய நாராயணா நியமனம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்க வழக்கு நீதிபதி சத்திய நாராயணா முன்பு கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அப்போது, தங்கள் தரப்பிலிருந்து கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உள்ளோம் என்று அவர் கூறியதால் வழக்கை ஜூலை 23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதன்படி தகுதி நீக்க வழக்கு இன்று (ஜூலை 23) விசாரணைக்கு வரவுள்ளது. 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தினசரி வழக்கை விசாரிக்க உள்ளதாகவும், அதன் பிறகு தீர்ப்பு வழங்க உள்ளதாகவும் நீதிபதி சத்திய நாராயணா தெரிவித்திருந்த நிலையில், விசாரணை முடிந்து ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று துவங்குகிறது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விசாரணை நடக்க உள்ளது. அதனால், விரைவில் வழக்கு முடிவுக்கு வந்து, தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.