பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி? அதிமுக தலைமை அதிர்ச்சி!

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் கடந்த 20ம் தேதியன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசியதை தொடர்ந்து இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிக்கு அதிகார பசி ஏற்பட்டுள்ளது என்று அவர் கடுமையாக விமர்சித்தார். சுமார் 90 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.

விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்த தால் தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் பாஜக அரசு எளிதில் வெற்றி பெற்றது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். எனினும் வாக்கெடுப்பில் எதிகட்சிகளுக்கு மொத்தம் கிடைத்திருக்க வேண்டிய வாக்குகளை விடவும் குறைவான வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று திரண்டன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தம் 312 எம்.பிக்கள் உள்ளனர். சிவசேனா வெளி நடப்பு செய்ததால் அதன் 18 எம்.பிகள் வாக்களிக்கவில்லை. எனவே 294 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர். அதிமுகவின் 37 பேரையும் சேர்த்தால் மொத்தம் 331 வாக்குகள் ஆளும் கூட்டணிக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 325 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இதுகுறித்து சில தகவல்கள் கிடைத்தன. அதன்படி, பாஜக எம்.பி விர்தல் ராட்டியா உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் வாக்களிக்கவில்லை. அதுபோலவே கீர்த்தி ஆசாத் வெளிநாடு சென்றதால் வாக்களிக்கவில்லை.

இவர்களை தவிர அதிமுகவை சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் ஏன் வாக்களிக்கவில்லை என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை!