நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்! ஆய்வு தகவல்!

இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும் ஆய்வு மையம் ஆண்டு தோறும் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலை பப்ளிக் அஃபேர்ஸ் இன்டக்ஸ் எனும் ஆய்வறிக்கை மூலம் வெளியிடும். இந்த மையமானது மாநிலங்கள் முழுவதும் ஆய்வு நடத்தி அதனை சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வரிசைபடுத்தி பட்டியலிடப்படும்.

அதுமட்டுமின்றி, 2 கோடி மக்கள் தொகைக்கு மேல் உள்ள மாநிலங்கள் பெரு மாநிலங்கள் மற்றும் 2 கோடி மக்கள் தொகைக்கு கீழ் உள்ள மாநிலங்கள் சிறு மாநிலங்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்படும்.

அந்த வகையில் 2018-ஆம் ஆண்டுக்கான பட்டியலை இந்த ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்டது. அதில் பெரு மாநிலங்களுக்கான வரிசையில், கேரள மாநிலம் தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழக அரசு 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கேரளா, தமிழகத்தை தொடர்ந்து தெலங்கானா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் நல்ல ஆட்சியை தரும் மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த வரிசையில் முதல் 5 இடங்களில் 4 இடங்களை தென் மாநிலங்களே பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு மாநிலங்களில் (2 கோடி மக்கள் தொகைக்கு கீழ்) நல்ல ஆட்சியை தரும் பட்டியலில் ஹிமாச்சல் பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து கோவா, மிசோரம், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளன.