உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், “அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு” என தினகரன் தரப்பு வாதம் வைத்தது.

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது.

அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் தரப்பு 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் வழக்கறிஞர் ராமன் வாதாடினார். அப்போது,

“எங்களது முதல் அதிருப்தி ஓ.பன்னீர்செல்வம் மீது தான். முதல்வர் மீது இல்லை.

கொறடாவின் உத்தரவை மீறி ஆளும் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னது இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு. முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம் தான்.

தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறோம் என்று முதல்வர் சொல்லவில்லை. சபாநாயகர் தான் அதனை கூறுகிறார். திமுகவுடன் கைகோர்த்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்கிறோம் என்றும் சபாநாயகர் தான் கூறினார். ஆளுநரை நாங்கள் சந்தித்த அதே தினம் திமுகவும் ஆளுநரை சந்தித்தற்கு நாங்கள் பொறுப்பாகாது” என வாதங்களை முன்வைத்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார்.

வழக்கு பின்னணி:

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக்கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.

இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் கடந்த 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன், அரசு சிறப்பு வழக்குரைஞர் திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர். மேலும் இந்த வழக்கில் இரு தரப்பிலும் தில்லியிலிருந்து மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் தாக்கல் செய்ய உள்ளீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் மேலும் சில ஆவணங்களைக் கூடுதலாக தாக்கல் செய்யப் போவதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி, இரண்டு தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட உள்ளனர்.

தொடர்ந்து 5 நாள்கள்… எனவே, கூடுதல் விவரங்கள் குறித்து மட்டும் வாதிட்டால் போதுமானதாக இருக்கும் . இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை (ஜூலை 23) முதல் வெள்ளிக்கிழமை ( ஜூலை 27) வரை தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் என உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.-க்களின் தகுதி நீக்க வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

தாக்கல் செய்யாத ஆவணங்கள் அடிப்படையில் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணா முன்பு 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணா முன்பு நேற்று (ஜூலை 23) காலை 10.30 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் ஏற்கனவே மாறுபட்ட தீர்ப்பை மட்டுமே வழங்கியுள்ளது. அந்த மாறுபட்ட தீர்ப்பில் மட்டுமே மூன்றாவது நீதிபதி முடிவெடுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் உள்ள சில விஷயங்களில் இரு நீதிபதிகளுக்கும் ஒன்றுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதில் மூன்றாவது நீதிபதி எந்த முடிவும் எடுக்கக் கூடாது. தீர்ப்பில் மட்டுமே முடிவெடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி தனது வாதத்தை தொடங்கினார்.

சபாநாயகரின் உத்தரவு என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது, இயற்கை நீதிக்கு எதிரானது, இது உள்நோக்கம் கொண்டது என்றும் சபாநாயகரின் உத்தரவை நீதித் துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ராமன், “பிரச்னை தொடர்பாக உட்கட்சியை அணுகவில்லை என்று முதல்வர் தரப்பிலிருந்து சபாநாயகரிடம் பதிலளிக்கப்பட்டது. இதன் நகலை எங்கள் தரப்புக்கு வழங்கியிருந்தால் பதிலளித்திருப்போம். சபாநாயகரிடம் தாக்கல் செய்யாத ஆவணங்கள் அடிப்படையில் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜக்கையனுக்கும், 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் வெவ்வேறு அளவுகோளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டாலினோடு கூட்டு சேர்ந்து அரசுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எவ்வித ஆதாரங்களும் இல்லை” என்றும் தனது வாதத்தில் கூறியுள்ளார்.

நீதிபதி சத்ய நாராயணா முன்பு இன்று நடைபெறவுள்ள விசாரணையில் 18எம்எல்ஏக்களுக்கு எதிரான சில முக்கிய வீடியோ ஆதாரங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்து வாதிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.