தமிழகம் முழுவதும் காவல்துறை பாதூகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 1.20 லட்சம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மாறிமாறி தகவல்கள் வந்ததால், திமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையை நோக்கி திமுக தொண்டர்கள் வரத் தொடங்கினர். அதனால் அப்பகுதியில் தொண்டர்களின் எண்ணிக்கை நேரம் செல்லசெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் சென்னையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.
சட்டம், ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை: இந்நிலையில், தமிழகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக, சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் நடவடிக்கையை காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை டிஜிபி தே.க. ராஜேந்திரன் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் உடனடியாக நடத்தப்பட்டது. அதில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக பொதுமக்களுக்கு தேவையான பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பிரச்னையின்றி கிடைப்பதற்கும், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டன. மேலும் பதற்றமான இடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் போலீஸார் பாதுகாப்பு வழங்கும்படியும் டிஜிபி உத்தரவிட்டார். அதேபோல ஒவ்வொரு காவல் நிலையத்திலும் முழு அளவில் காவலர்கள் பணியில் இருக்கும்படியும், காவலர்கள் முழு திறனுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறும் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள் எம்.சி.சாரங்கன், எச்.எம்.ஜெயராமன், அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை விட, கூடுதலாக பாதுகாப்பு வழங்குவது, பிற பணிகளில் இருக்கும் காவலர்களை சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்கு உடனடியாக திருப்பி அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதேபோல அரசுப் பேருந்து பணிமனை, பெட்ரோல் விற்பனையகங்கள், வங்கிகள், அரசு மருத்துவமனைகள், ஆவின் பால் விற்பனை மையங்கள் ஆகிய இடங்களில் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது எனவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
1.20 லட்சம் போலீஸார்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் ஆயுதப் படை போலீஸார் உள்பட சுமார் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், அதிவிரைவு படையினர், 15 ஆயிரம் ஆயுதப் படையினர் என சுமார் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் எவ்வித இடையூறு ஏற்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்கும்படி போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நிலைமை சீராகும் வரை காவலர்கள் தொடர்ந்து பணியில் இருக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டுகோள்
கட்சித் தொண்டர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காக்க வேண்டும் என்று திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் உடல்நிலையில், காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல், எதிர்பாராத ஒரு தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஆகவே, கட்சித் தொண்டர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.