சிறார் பாலியல் வன்கொடுமை! உறுதி செய்யப்பட்ட தூக்குதண்டனை!

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

இந்த மசோதா மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்தினாலும், இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி, உபியில் உன்னாவ் நகரில் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

அந்த அவசரச்சட்டத்துக்கு மாற்றாகத் திருத்த மசோதாவை மக்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது நேற்று மக்களவையில் 2 மணிநேரம் விவாதம் நடந்தது. இந்த மசோதா மீது உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

இந்த அளவு கடுமையான சட்டம் கொண்டு வந்திருப்பதன் நோக்கமே 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் பெண்களைப் பலாத்காரம் செய்தால் அதற்கு மட்டுமே தண்டனை விதிக்கும் வழிமுறை இருந்தது.

ஆனால், 16 வயதுக்கு கீழ்பட்ட, அல்லது 12 வயதுக்குள் உள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள், சட்டவிதிகள் இல்லை. அந்தத் தண்டனை விவரங்கள், கடினமான சட்டங்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளன.

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த நிகழ்வுகள், கூட்டுப்பலாத்காரம் செய்த நிகழ்வுகள் நாட்டையை உலுக்கின என்பதை அறிவோம். அதைக் கட்டுப்படுத்தவே இந்தக் கடுமையான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம்.

பெண்களைப் பலாத்காரம் செய்தால் விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறை தண்டனையாகவும் விதிக்கப்படும்.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறையாகவும் மாற்றப்படும். இதன்படி குற்றவாளி சாகும் வரை சிறையில் இருக்க நேரிடும்.

16வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட்டுப்பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கலாம்.

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்குக் குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை அல்லது தூக்கு தண்டனை விதிக்கலாம். 12வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கலாம்.

இந்த மசோதாவில் சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக வழக்குகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து, நீதிமன்றத்தால், தண்டனை அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதேபோல மேல்முறையீட்டுக்கு வழக்கு சென்றால், அதிகபட்சமாக 6 மாதங்களில் வழக்குகள் நடத்தி முடிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

16வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் அல்லது கூட்டுப்பலாத்காரம் செய்ததாக எழும் குற்றச்சாட்டின் கீழ் எவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்படாது எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. கிரண் கேர் பேசுகையில், சரியானநேரத்தில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் இந்தக் குற்றங்களை இனிமேல் எப்படிக் குறைக்கப்போகிறோம் என்பதைப் பொருத்து இருக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த மசோதா மீதான விவாதத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் எம்.பி. என்.கே.பிரேமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பி.கே.சிறீமதி டீச்சர் ஆகியோரும் பேசினார்கள்.