#அஞ்சா_நெஞ்சர்_அழகிரி #அடிப்பாரா_செஞ்ச்சுரி? பகுதி -2

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வரும், அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை பற்றியும், தவறாமல் பேசுகின்றனர். அவரை மீண்டும் கட்சியில் இணைத்து செயல்படும்படி, ஸ்டாலினிடம் வலியுறுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

தென் மண்டல அமைப்பு செயலர் பதவி வகித்த அழகிரி, 2014ல், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். அதனால், அதிருப்தி அடைந்த அழகிரி, லோக்சபா தேர்தலிலும், 2016 சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். இதனால், தென் மாவட்டங்களில், தி.மு.க., வெற்றி பாதித்தது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியை விமர்சித்த அழகிரி, ‘செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க., வெற்றி பெறாது’ என்றார். இதனால், அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில், ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் உறுதியாக இருந்தனர்.

இச்சூழலில், ‘இன்னும், ஆறு மாதத்திற்கு பின், தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என, சமீபத்தில், அழகிரி கூறியிருந்தார். இவ்வாறு, அவர் கூறிய சில நாட்களுக்குள், கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை, கோபாலபுரம் வீட்டில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், திடீரென ரத்தம் அழுத்தம் குறைந்து, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அன்றைய இரவு, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு என, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், டாக்டர்களிடம் ஆலோசித்தனர். அப்போது, அழகிரி தான், ‘அப்பாவை, உடனடியாக, காவேரி மருத்துமவனைக்கு அழைத்து செல்லுங்கள்’ என, சத்தம் போட்டுள்ளார்.

அவரது கோபத்துக்கு பயந்து, உடனே மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில், கருணாநிதி சேர்க்கப்பட்டார்; சில நொடிகளில், அவரது ரத்த அழுத்தம் சீரானது. மருத்துவமனையில், கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து, அழகிரி-ஸ்டாலின் இடையே ஏற்ப்பட்ட கடும் மோதலுக்குப் பிறகு அழகிரி தெரிவித்த ஆலோசனையை, ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டார்.

மருத்துவமனைக்கு வருகிற நண்பர்கள், தொழிலதிபர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கருணாநிதியின் நண்பர்கள் அனைவரையும், மருத்துமவனையில் உள்ள அறையில் சந்தித்து, அழகிரி தனியாக பேசுகிறார். கருணாநிதி குடும்பத்தினரும், முதலில் அழகிரியை சந்தித்து விட்டு தான், ஸ்டாலினிடம் சென்று பேசுகின்றனர். அப்போது, அழகிரியின் அரசியல் வாழ்க்கை குறித்தும், கட்சியில், அவருக்கு முக்கிய பதவி வழங்குவது குறித்தும், பரிந்துரை செய்கின்றனர்.

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், கட்சியை, ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து நடத்த வேண்டும் என்றும், அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவதுபோல, அழகிரியும், ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், டில்லி அரசியலை, கனிமொழியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கூறியுள்ளனர்.

மேலும் சமீபகாலமாக ஸ்டாலினின் மருமகன் சபரீஷனின் தலையீடு, கட்சியில் அதிகம் இருப்பதாக, புகார் சொல்லப்படுகிறது. அவரை கட்சி நடவடிக்கைகளில் தலையிடாமல் தடுத்து, ஸ்டாலின் குடும்பத் தொழில்களை மட்டும், அவர் பொறுப்பில் விட்டு விட வேண்டும் என்றும், காவேரியில் நடந்த பஞ்சாயத்தில் பேசப்பட்டு உள்ளது.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும், திரைப்பட இயக்குனருமான ஒருவர், ஸ்டாலினிடம், ‘கட்சியை இரண்டாக உடைத்தவர், வைகோ. கடந்த தேர்தலில், கருணாநிதியை, ஆறாவது முறை முதல்வராக பதவி ஏற்க விடாமல் தடுத்தவர். அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளீர்கள். ஆனால், வைகோ பிரிந்து சென்றபோது, தென் மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்திய அழகிரியை, வேண்டாம் என்பீர்களா’ என, கோபமாகக் கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு, ஸ்டாலின் பதில் ஏதும் கூறாமல், மவுனமாக இருந்துள்ளார். கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர், ‘கட்சியில், அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்களின் ஆதிக்கம் தான் உள்ளது. அனைத்து மட்டங்களிலும், அவர்களின் தலையீடு உள்ளது. இதனால், கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. திராவிட சிந்தனை உள்ளவர்களுக்கே, முக்கியத்துவம் தரப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

‘அழகிரியை மீண்டும் சேர்க்காவிட்டால், அவர், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிரானவர்களுடன் சேரவும் தயங்க மாட்டார். அப்படி நடந்தால், அது, தி.மு.க.,வுக்கு ஆபத்தாகி விடும்’ என்றும், அந்த பெண் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், மருத்துவமனைக்கு வரும், மிக முக்கிய நபர்கள் பலரும் அழகிரியுடன் மருத்துவமனை தனியறையில் அரசியல் தொடர்பான ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை நம்பி கூட்டணி வைப்பதைவிட பாஜக வுடன் கூட்டணி ஏற்படுத்தினால் திமுக வுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும் என்று பேசிய நட்சத்திர நாயகன் சுமார் ஒருமணி நேரமாக அழகிரியுடன் ஆலோசனை செய்துள்ளார்.அப்போது தயாநிதி அழகிரி மட்டுமே உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் கடந்த மாதம் வெளியிட்ட அஞ்சா நெஞ்சர் அழகிரி அடிப்பாரா செஞ்சுரி செய்தியில் அழகிரியின் அடுத்த கட்ட அரசியல் முயற்சி குறித்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.