கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் திடீர் நிறுத்தம்! மறு உத்தரவு விரைவில் வெளியாகும் – கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்!

கூட்டுறவுச் சங்க தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 18,775 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி தலைவர், துணை தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சங்கங்கள் தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கண்ட நிர்வாகிகள் கவனிப்பார்கள்.

2013ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக தொடக்க நிலையில் உள்ள 18,435 சங்கங்களுக்கு நான்கு நிலைகளில் தேர்தல் நடத்தப்படுவதாக, கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்தார். கூட்டுறவுச் சங்க மாவட்ட மற்றும் இணை பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட தேர்தல் அலுவலர்களாகவும், மாநில பதிவாளர் மாநில தேர்தல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டார்.முதல்நிலையில் 4698 சங்கங்களுக்கு கடந்த ஏப்.4ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. முன்னதாக, ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் சங்க நிர்வாகிகள் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டனர். வேட்புமனு தாக்கலின்போது பிற உறுப்பினர்கள் மனுக்களை வாங்க கூடாது என்று அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது.

இதை கண்டித்து ஆளுங்கட்சியினரிடம் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் நியாயம் கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே, முதல்நிலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் வெற்றி பெற்ற நிர்வாக குழு உறுப்பினர்கள் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுத்தனர். 2ம் நிலையில் 4,479 சங்கங்களுக்கு ஏப்.7ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த சூழலில் ஆளுங்கட்சியினரால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து, நீதிபதிகள் கடும் கட்டுப்பாடு விதித்தனர். அதனடிப்படையில், 3 மற்றும் 4ம் நிலைகளுக்கு மாற்று தேதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கிடையில், இதுதொடர்பான வழக்கில் கூட்டுறவுச் சங்க தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தும்படி மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும்தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. நீதிமன்ற தடையால், 2ம் நிலைகளுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தன. மேலும், 2, 3 மற்றும் 4ம் நிலைகளுக்கான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படாமல் இருந்தன.பின்னர், இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்க நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பியது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கூட்டுறவுச் சங்க தேர்தல் நடவடிக்கைகளை மீண்டும் தொடரலாம் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, கூட்டுறவுச் சங்கங்களின் மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் நேற்று முன்தினம் அவசர, அவசரமாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தடை நீக்கப்பட்டுள்ளதால் 2ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கான தலைவர், துணை தலைவர் தேர்தல் முடிவுகள் வரும் 2ம் தேதி(நாளை) அறிவிக்கப்டும். 3, 4ம் நிலைகளில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகளும் 2ம் தேதி அறிவிக்கப்படும். பின்னர், 3 மற்றும் 4ம் நிலைகளில் உள்ள தலைவர், துணை தலைவர் தேர்தல் வரும் 6ம் தேதி நடத்தப்படும். என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில்

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக திமுக தலைமை கொறடா சக்கரபாணி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் பி.டி.ஆஷா அமர்வு நேற்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு புகார் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைத்து விசாரிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து தேர்தலுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. புதிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் இன்று உத்தரவினை பிறப்பித்து உள்ளது.