மம்தா போடும் இரட்டை வேடம்?

என்.ஆர்.சி. விவகாரத்தில் 2005-ம் ஆண்டு லோக்சபாவில் மம்தா பானர்ஜி, அநாகரீகமாக நடந்து கொண்டதை சுட்டிகாட்டி இப்போது அவர் இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை அடையாளம் காண என்.ஆர்.சி. எனப்படும் குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் 40 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. இதை கண்டித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இதே போன்று 13 ஆண்டு முன் மேற்குவங்கத்தில் சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் நேர்மாறான கருத்தைத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2005-ம் ஆண்டு லோக்சபா எம்.பி., யாக இருந்த மம்தா பானர்ஜி பார்லி.யில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில் மேற்குவங்கத்திற்குள் வங்கதேசத்தவர்களின் சட்டவிரோத ஊடுருவல்கள் பேரிடராக மாறியிருக்கிறது. இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தவர்களின் வாக்காளர் பட்டியல் என்னிடம் உள்ளது. எனது தீர்மானத்தின் மீதான விவாதம் எப்போது எடுத்துக் கொள்ளப்படும் என கேள்வியெழுப்பினார். தீர்மானம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாததால், ஆத்திரமடைந்த மம்தா கையில் வைத்திருந்த தீர்மான நகல்களை துணை சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வாலே மீது வீசி ஏறிந்து விட்டு அங்கேயே தமது ராஜினாமா கடித்தை வழங்கினார்.

தீர்மான நகல்களை மம்தா வீசியெறிந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அப்போது எதிராக இருந்த மம்தா இப்போது ஆதரவாக கருத்து தெரிவித்து நேர்மாறாக பேசுவது 2019-ம் பொதுத்தேர்தலில் ஓட்டு வங்கிக்காகவும், பிரதமர் நாற்காலியை குறி வைத்து தான் என மம்தா பானர்ஜி மீது காங். உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

நேற்று முன்தினம் ஒரு பேட்டியின் போது பிரதமர் நாற்காலி தனக்கு முக்கியமல்ல, என்று பேசிய மம்தா அதன் தொடர்ச்சியாக “பிரதமர் பதவியை விட்டுத்தரத் தயாரென்று அறிவித்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.