கேரளாவில் வெள்ளப்பெருக்கு? பலி 29! உள்துறை அமைச்சர் ஆய்வு?

தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனால், மாநிலம் முழுவதிலும் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன.

வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், ஆலப்புழை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாகும்.
குறிப்பாக, மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக வயநாடு மாவட்டம், பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மிகுந்த பாதிப்புக்குள்ளான 7 மாவட்டங்களிலும் ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உடனடி பாலங்களை அமைத்து மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். இதேபோன்று, விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளத்தில் உள்ள 40 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, 22 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையின் முதலாவது மதகு கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை முதல் மேலும் நான்கு மதகுகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இங்கு நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரியாறு மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்றும், ஆகவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். வெள்ளப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலை அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் தலமான மூணாறில் ரஷியா, சவூதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். நிலச்சரிவு காரணமாக அவர்கள் வெளியேற முடியாமல் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே சமயம், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.

இதற்கிடையே, இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு உள்ளிட்ட இடங்களில் பலத்த இடி மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகம் நிதியுதவி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். இதுதவிர, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுவோருக்கு தேவைப்படும் கருவிகள் மற்றும் மருத்துவக் குழுவினரை அனுப்பி வைக்கவும் கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கருக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
முன்னதாக, அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனை வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகையில், மாநிலத்தின் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். அத்துடன், கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் முதல்வரிடம் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
இதற்கிடையே, மக்களவையில் கேரள மழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, ராஜ்நாத் சிங் பதில் அளிக்கையில், கேரளத்துக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும், மழை பாதிப்புகளை கணக்கிடுவதற்காக உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறினார்.