போராட்டங்களால் பொதுச் சொத்துக்கள் சேதம்? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நாட்டில் எதற்கெடுத்தாலும் போராட்டங்களும் அதனையடுத்து வன்முறைச் சம்பவங்களும் அரசு, தனியார் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் கவலையளிக்கிறது என்று கூறிய உச்ச நீதிமன்றம் இதற்கான சட்டத் திருத்தத்துக்காக அரசின் முடிவை எதிர்நோக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் கூறியபோது நாட்டில் எங்காவது ஒரு பகுதியில் தினப்படி போராட்டங்கள், வன்முறைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன என்று சமீபத்திய கன்வாரிய போராட்டத்தைக் குறிப்பிட்டு எழுப்பிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசின் சட்டத்திருத்தத்துக்காகக் காத்திருக்கப் போவதில்லை இதற்கான விதிமுறைகளை உச்ச நீதிமன்றமே வலுப்படுத்தும் என்ற ரீதியில் பதிலளித்தனர்.

கன்வாரியாக்கள் டெல்லியில் வாகனங்களைச் சேதப்படுத்தினர், பத்மாவத் படம் ரிலீஸ் ஆன போது வன்முறைகள் வெடித்தது. ஒரு வன்முறைக் கும்பல் அதன் நாயகை மூக்கை வெட்டி விடுவதாக அச்சுறுத்தினர். இதற்கு ஒரு எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை, என்று அட்டர்னி ஜெனரல் கூறினார்.

மேலும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தின் வன்முறையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இவற்றையெல்லாம் தடுக்க உங்கள் ஆலோசனை என்ன?” என்று நீதிபதி அட்டர்னி ஜெனரலை நோக்கிக் கேட்டார்.

“காவல்துறை உயரதிகாரிகளிடத்தில் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” என்று கூறிய வேணுகோபால் இதற்கு ஓர் உதாரணமாக டெல்லியில் அதிகாரபூர்வமற்ற கட்டிடங்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டிடிஏ அதிகாரிதான் இதற்குப் பொறுப்பு என்று கூறியவுடன் நடவடிக்கைகள் துரிதமடைந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும் மத்திய அரசும் இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் அமர்வு, “சட்டத்திருத்தங்களுக்காக காத்திருக்க முடியாது, சூழ்நிலைமை தீவிரமாக உள்ளது, இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

2009-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் வன்முறை, போராட்டங்கள், அரசுடைமை, தனியார் உடைமைகளுக்குச் சேதம் ஆகியவை குறித்து வழிகாட்டுதலை வழங்கியிருந்தது. அதாவது எந்த ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்துபவர்களை வன்முறை, சொத்துச் சேதங்களுக்குப் பொறுப்பேற்க வைக்க வேண்டும், போராட்டங்கள் அமைதியாக நடைபெற காவல்துறையுடன் அமர்ந்து பேசி போராட்டத் தலைமைகள் முடிவெடுக்க வேண்டும்.

எந்த ஒரு ஆயுதங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

போலீஸும் மாநில அரசும் எந்த ஒரு ஆர்ப்பாட்டம் குறித்து வீடியோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் எஸ்.பியும் மாநில அளவில் ஆர்பாட்டம் என்றால் மாநில போலீஸ் துறையின் உயரதிகாரி ஒருவர் போராட்டங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

ஆகிய வழிகாட்டு நெறிமுறைகள் பரிசீலிக்கப்பட்டன, இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.