எம்எல்ஏ வுக்கு கொலை மிரட்டல்? போலீசார் வலைவீச்சு!

உத்தர பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் – எம்.எல்.ஏ., ஒருவர், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் இருந்து, கொலை மிரட்டல் வந்ததாக அளித்த புகாரை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புகார் :

உத்தர பிரதேச மாநிலத்தின், பலியா மாவட்டத்தில் உள்ள, ரஸ்ரா சட்டசபை தொகுதியின், எம்.எல்.ஏ., வாக இருப்பவர், உமா சங்கர் சிங்; பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவர், நேற்று, போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:

ஆக., 6ல், என் மொபைல் போன் எண்ணுக்கு, ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், என், இ – மெயிலை பார்க்கும்படி கூறப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில், நான் டில்லியில் இருந்தேன். இந்த விவகாரத்தை, பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதையடுத்து, ஆக., 8ல், மீண்டும், அதே எண்ணில் இருந்து, என், இ – மெயிலை பார்க்கும்படி குறுந்தகவல் வந்தது. இதன்பின், இ – மெயிலை பார்த்தேன். அதில், ‘பலியா மாவட்ட மக்களுக்காக, நீங்கள் உழைக்கிறீர்கள். இதை நீங்கள் தொடர வேண்டுமானால், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும்.

விசாரணை :

‘இல்லையெனில், எப்போது வேண்டுமானாலும், உங்களை சுட்டுக் கொன்றுவிடுவோம்’ என, கூறப்பட்டு இருந்தது. மேலும், அந்த தகவலில், நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமின் புகைப்படமும் இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத், தற்போது, அண்டை நாடான பாகிஸ்தானில் தலைமறை வாக உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.