இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார்.

ஸ்டாலின் கலக்கம்?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்’ தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் ஆதங்கத்தை மூன்று நாள்களில் தெரிவிப்பேன்’ என்று அழகிரி கூறியுள்ளார். இதனால், கருணாநிதி இல்லாத மு.க.ஸ்டாலினை முதன்மையாகக் கொண்ட திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

தென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பை வகித்தவர் மு.க.அழகிரி. அந்த மாவட்டங்களைப் பொருத்தவரை அழகிரி எடுப்பதே முடிவு எனும் அளவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இருக்கும்போது அவருக்கு திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், திமுகவின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிய போது, படிப்படியாகக் கட்சியிலிருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்டார்.

இறுதியாக 2014 மார்ச் 24-இல் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இது எல்லாம் கருணாநிதி நினைவுடன் இருந்த நிலையில் எடுத்த முடிவாகும். அதன் பிறகு, அழகிரியுடன் கட்சியினர் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. கோபாலபுரம் இல்லத்துக்கு மட்டும் அழகிரி வந்து செல்லக்கூடியவராக இருந்தார். அதுவும் பல நேரங்களில் கருணாநிதியைச் சந்திக்காமலே சென்று வரக்கூடியவராக இருந்தார்.

ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை இன்றி…மு.க.ஸ்டாலினிடமும் அவருக்கு எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்து வந்தது. ஸ்டாலின் தலைவராக இருக்கும் வரை திமுக தேர்தலில் வெற்றி பெறாது என்று அழகிரி கூறி வந்தார். ஆனால், கருணாநிதி உடல்நிலை கடந்த ஜூலை 28-ஆம் தேதி மிகவும் மோசமாகி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அழகிரி உடன் இருந்து கவனித்து வந்தார்.

பிணக்கு அதிகரிப்பு:

ஒரு கட்டத்தில் ஸ்டாலினும், அழகிரியும் பேசிக் கொண்டதுடன் இருவரும் இணைந்து செயல்பட்டனர். மெரீனாவில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டது வரை இந்த இணைப்பு தொடர்ந்தது. தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் பெரிய பிணக்கு ஏற்பட்டுள்ளது.

அழகிரியின் எதிர்பார்ப்பு என்ன?

திமுகவில் தற்போது தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியாக உள்ளன. இதில் தலைவர் பதவியை ஸ்டாலின் வைத்துக் கொள்வதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அழகிரியும்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அடுத்து பொருளாளர் பதவியும் தற்போது ஸ்டாலின் வசமே உள்ளது. மேலும், திமுகவில் 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் கட்சியில் தனக்கு என்ன பதவியை அழகிரி எதிர்பார்க்கிறார் என்பதை அவர் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

பேச்சுவார்த்தை தோல்வி:

கருணாநிதியின் குடும்பத்தில் தற்போது மூத்தவராக முரசொலி செல்வமே இருந்து வருகிறார். அவர்தான் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவில் எந்தவித பிளவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் – அழகிரி இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். அழகிரியைக் கட்சியில் சேர்க்கலாம், ஆனால் மாநிலப் பொறுப்புக் கொடுக்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின் பிடிவாதமாக இருக்கிறார்.

கனிமொழிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு இளைஞர் அணித் தலைவர் பதவியும் அளித்து குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்த சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் கட்சிப் பொறுப்பில் அமர்த்தினால் திமுகவுக்கு ஏற்கெனவே இருக்கும் குடும்பக் கட்சி’ என்கிற அவப்பெயர் அதிகரிக்கும் என்று கருதுகிறார் மு.க. ஸ்டாலின்.

இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பு:

அழகிரிக்கு, ஸ்டாலினையும்விட இரண்டாம் கட்டத் தலைவர்களே பெரும் எதிர்ப்பாளர்களாக இருந்து வருகின்றனர். கருணாநிதி, முரசொலி மாறன், வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பிறகு அடுத்தகட்ட திமுக நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகப் பேசக்கூடியவராக அழகிரியே இருந்து வருகிறார். இதனால் அவரை அணுகுவதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் பயப்படுகின்றனர்.
காவேரி மருத்துவமனையில் அழகிரி இருந்த நேரங்களில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரும்பாலானோர் மருத்துவமனையில் இருந்து தொலைவிலேயே நின்றிருந்தனர். அதனால், கட்சிக்குள் அழகிரி கொண்டு வரப்பட்டால், தங்களால் முன்புபோல இருக்க முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டு, அழகிரியைச் சேர்ப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக

சென்னையில்,நேற்று ஆங்கில, ‘டிவி’ சேனலுக்கு, அழகிரி அளித்த பேட்டி:

உங்கள் ஆதங்கம் தான் என்ன?

எனக்கு பல ஆதங்கங்கள் இருக்கின்றன; அந்த ஆதங்கங்களை எல்லாம், ஆறு மாதத்தில், தொண்டர்கள் நிறைவேற்றுவர்.

மீண்டும், தி.மு.க.,வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா?

என்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், அவர்கள் இல்லை.

கட்சியில் சேருவது தொடர் பாக, நீங்கள் பேச்சு நடத்தியுள்ளீர்களா?

நான் எந்த பேச்சும் நடத்தவில்லை. ‘செய்தி தொடர்பாளர்கள் யாரும், ‘டிவி’க்களில், என்னை பற்றி பேட்டி அளிக்கக் கூடாது’ என, ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்; பின், எப்படி என்னைக் கட்சியில் சேர்ப்பர்?

கருணாநிதி மரணம் அடைந்துள்ள நிலையில், உங்களை புறக்கணிப்பது, சரியான முடிவா?

இதுபற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான், ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும், ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், கட்சி சின்னாபின்னமாகி விடும்.

அவர்கள் பேச்சு நடத்த வந்தால், நீங்கள் பேசத் தயாரா?

அதெல்லாம், அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். கண்டிப்பாக, காலம் பதில் சொல்லும். அவர்களை எல்லாம், கருணாநிதியே தண்டிப்பார். கருணாநிதியின் ஆத்மா, அவர்களைச் சும்மா விடாது.

கட்சியில், உங்களை சேர்க்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

எனக்கென்ன தெரியும்? எனக்குப் புகழ் இருக்கிறது; கட்சித் தொண்டர்கள், என்னை விரும்புகின் றனர். அதனால், அவர்களுக்குப் பயம் இருக்கிறது. நான் வந்தால், வலிமையான தலைவராகி விடுவேன் என்ற, எண்ணமாக இருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசி சரி செய்யலாமே?

குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும், இதில் அக்கறை இல்லை. நான் கட்சிக்குள் வருவது பற்றி, யாரும் பேசியதில்லை.

தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., சரியாக செயல்படுகிறது என, நினைக்கிறீர்கள்.

சரியாகச் செயல்பட்டால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ‘டிபாசிட்’ பறி போகுமா; தொடர்ந்து, தேர்தல் தோல்விகளை சந்திக்கின்றனர். ‘கட்சிக்காரன் பணம் வாங்கி விட்டான்’ என, துரைமுருகன் பேசுகிறார். கட்சிக்காரன், தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான்! அண்ணாதுரை காலத்திலிருந்து உழைத்து வருகிறான். இந்த பேச்சை, அவன் எப்படி எடுத்துக் கொள்வான். இதெல்லாம் தான் என் ஆதங்கம்.பணம் கொடுத்தால், பதவி கொடுக்கின்றனர். முன்பு, ஒரு செயலர் இருந் தால், ஒரு துணைச் செயலர் இருப்பர். தற்போது, 10, 15 பேர் இருக்கின்றனர்.இவ்வாறு அழகிரி கூறினார்.

இன்று தி.மு.க., செயற்குழு

தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என, 750 பேர் பங்கேற்க உள்ளனர்.முதலில், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, கட்சியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என, தெரிகிறது.-