#ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசு மேல்முறையீடு?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.

அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரகீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின்நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 9-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பிறப்பித்த ஆணை மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வெளியிடப்பட்டது என்றும், இந்த ஆணையை எதிர்த்த ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும், எனவே மனுவின் ஏற்புத்தன்மை கேள்விக்குரியது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதத்தை தொடருமாறு உத்தரவிட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள நீதிபதிகள் அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவிட்டனர்.

நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும். ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், எக்காரணம் கொண்டும் ஆலை இயங்க அனுமதி கிடையாது என்றும், நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

இந்த உத்தரவை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் பரவலாக பெறப்பட்ட புகார்கள், பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவு ஆகும். அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சட்ட வரையறைக்குள் அடங்காது.

மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்கனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு அமர்வில் மனு தாக்கல் செய்து, அந்த மனுவின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அப்படி அந்த மனுவின் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், மற்றொரு கோர்ட்டு இதனை விசாரிப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை.

மேலும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை தடை செய்ததற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு மதுரை ஐகோர்ட்டால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வரமுடியாது. இதுபற்றி தமிழக அரசு தரப்பில் எடுத்துக் கூறியும், தேசிய பசுமை தீர்ப்பாயம் இதனை கருத்தில் கொள்ளவில்லை. இது தவறானது ஆகும்.

எனவே, ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கின் ஏற்புத்தன்மையை அனுமதித்தது மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியது ஆகிய இடைக்கால உத்தரவுகளை ரத்து செய்வது மட்டுமின்றி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.