2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

‘சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது

”இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை.

அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது” என்று தெரிவத்தார்.

முன்னதாக “ஒரேநாடு ஒரே தேர்தல் ” குறித்து சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர்

“நாம் இப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்து கொடுத்த தேர்தல் முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதில் `நம்பிக்கை இல்லா தீர்மானம்` கொண்டு வருவதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல, ஒரு மாநிலத்தில் கொண்டு வந்து ஆட்சிக் கவிழும் பட்சத்தில், இப்போது முன்வைக்கப்படுகிற `ஒரே தேர்தல்` முறையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த நேரிடும். இதில் அரசமைப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை கவிழ்க்க முடியாத வண்ணம் திருத்தம் கொண்டு வந்தால், `ஒரே தேர்தல்` என்பது சாத்தியமாகும்.” என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,.

மற்றபடி, தேர்தலை நடத்துவதற்கான துணை ராணுவம், ஊழியர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவைப்படுவார்கள். முறையாக முன் திட்டமிட்டால், இந்த இடர்களையும் தவர்க்கலாம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இதையடுத்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை, மத்திய சட்ட கமிஷன் விரைவில் பரிந்துரைக்க உள்ளதாக, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்காக, அரசியல் சாசனத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், தேவையான
திருத்தங்களை, சட்ட கமிஷன் பரிந்துரை செய்ய உள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இருப்பினும், இதுதொடர்பாக சட்ட கமிஷன் அளிக்கும் அறிக்கை தொடர்பான விவாதங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இடையே நடக்க, வாய்ப்புகள் உள்ளன.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் சாசனத்தில் இரண்டு ஷரத்துகள் திருத்தப்பட்டு, நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால், 2019 முதல், நாடு முழுவதும் ஒரே சமயத்தில், இரு கட்டங்களாக தேர்தல் நடத்தும் வாய்ப்பு உள்ளது. 2019ல், முதல் கட்ட தேர்தலும், 2024ல், இரண்டாம் கட்ட தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்படலாம்.

இது தொடர்பாக, கடந்த ஏப்ரலில், சட்ட கமிஷன் தயாரித்துள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலை அடுத்து, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், தங்கள் அரசின் ஸ்திரத் தன்மையையும், லோக்சபா அல்லது சட்டசபையின் ஸ்திரத் தன்மையையும் உறுதி செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் அரசு, பாதியில் கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கும் அந்த அரசே ஆட்சியில் நீடிக்கும்; தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் வரை, புதிதாக தேர்தல்
நடத்தப்படாது. முதல் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், 2021க்குள் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் மாநிலங்கள் உள்ளன. ஆந்திரா, அசாம், பீஹார், ம.பி., மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், இதில் உள்ளன.

வரும், 2024ல், இரண்டாம் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், உ.பி., குஜராத், கர்நாடகா, டில்லி, பஞ்சாப் உள்ளன. லோக்சபா தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலை நடத்த, இந்த மாநிலங்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மத்தியில் ஆளும், அகாலிதளம், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை, ஒரே சமயத்தில் தேர்தலை ஆதரிக்கின்றன. காங்., திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, தி.மு.க., தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எதிர்க்கின்றன.

முன்னதாக

தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் , சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவது பற்றிய மத்திய அரசின் திட்டத்தை ஆதரித்துப் பேசிய அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பரபரப்பைக் கிளப்பிய நிலையில் ,

இந்த மாத துவக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் “2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவது குறித்த ஆட்சேபனையை தமிழக அரசு தெரிவிக்கலாம்” என்றும் “அவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்ட மன்றத் தேர்தலை நடத்தும் பட்சத்தில் அதனால் ஏற்படும் சாதக பாதகங்களால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுமா ? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளதாகவும், விரைவில் தமிழக அரசின் தலைமைச் செயலர் இந்தக்கடிதம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிக்க உள்ளதாகவும் #தலைமைச் செயலக வட்டார தகவல்கள் கசிகிறது…..