“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை!

‘மின்னணு இயந்திரம் வாங்க 4,555 கோடி ரூபாய் தேவை’

புதுடில்லி : ‘லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தலை, உடனடியாக நடத்த வேண்டுமானால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கு, 4,555 கோடி ரூபாய் தேவை’ என, சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த விவாதம் நடந்து வருகிறது.
இது குறித்து, மத்திய சட்ட அமைச்சகம், சமீபத்தில் தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கை:

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பி.ஏ.டி., எனப்படும் ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவை அதிகளவில் தேவை என, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தற்போதைய நிலையில், உடனடியாக லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தினால், 12.9 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், ஓட்டுப் பதிவை உறுதி செய்வதற்கான, 12.3 லட்சம் இயந்திரங்கள் தேவை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தற்போதைய விலையின்படி, உடனடியாக, 4,555 கோடி ரூபாய் இதற்கு தேவைப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் ஆயுட்காலம், 15 ஆண்டுகள். அதன்படி, 2024ல், தேர்தலை நடத்துவதற்கு, தற்போதைய விலையின்படி, இயந்திரங்கள் வாங்க, 1,751 கோடி ரூபாய் தேவைப்படும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.