நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவது உங்களுடைய உரிமை, அது ஒன்றும் தொண்டு போல கிடையாது என்று பெண் வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக புதிதாக பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகளை கெளரவிக்கும் வகையில், உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, “நீதித்துறையில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளிலும் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அந்த இடஒதுக்கீட்டைப் பெறுவது உங்களுடைய உரிமை. அது தொண்டு போல கிடையாது,” என்றார்.
“இந்தியாவில் 17 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். அதில் வெறும் 15 சதவீதம் மட்டுமே பெண்கள். மாநில வழக்கறிஞர்கள் சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திடம் அதன் தேசிய செயற்குழுவில் ஏன் ஒரு பெண் வழக்கறிஞர் கூட இல்லை என்ற கேள்வியை நான் எழுப்பினேன். இவை எல்லாம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய விஷயம்,” என்று என்.வி. ரமணா தெரிவித்தார்.
தமது பேச்சின்போது, கார்ல் மார்க்ஸின் வரிகளையும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா மேற்கோள்காட்டினார். உலகின் பெண்கள் ஒன்று சேர வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு இடையிலான தொடர்புகளைத் தவிர இழப்பதற்கு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.