தன் இயற்கையான வாழ்விடமான அண்டார்டிகாவைச் சேர்ந்த ஒரு பென்குயின், குறைந்தபட்சம் 3,000 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நியூசிலாந்தின் கடற்கரையோரத்தை அடைந்துள்ளது.
உள்ளூர் மக்களால் தற்போது ‘பிங்கு’ என்று அழைக்கப்படும் அடேலி பென்குயின் கடற்கரையில் தொலைந்து போனது போல் காணப்பட்டது. பிங்கு பென்குயினை முதலில் கண்ட உள்ளூர்வாசியான ஹாரி சிங், அவர் முதலில் அதை ஒரு பொம்மை என்றே கருதியதாகக் கூறினார். நியூசிலாந்து நாட்டின் கடற்கரையில் அடேலி ரக பென்குயின்கள் மூன்றாவது முறையாக கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிரைஸ்ட்சர்ச் நகருக்கு தெற்கே உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் ஹாரி சிங் மற்றும் அவரது மனைவி, பேர்ட்லிங்ஸ் ஃப்ளாட் என்கிற கடற்கரையில் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வெளியில் நடந்து சென்றபோது பென்குயினை முதலில் கண்டனர். “முதலில் நான் பிங்குவை ஒரு மொம்மை என்று தான் கருதினேன், திடீரென்று அந்த பென்குயின் தன் தலையை அசைத்தது, பிறகு தான் அது உண்மையாகவே உயிருள்ள விலங்கு என்பதை உணர்ந்தேன்” என ஹாரி சிங் பிபிசியிடம் கூறினார்.
ஹாரி சிங்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள பென்குயின் காணொளி காட்சிகள், பென்குயின் தொலைந்து போய், தனிமையில் திரிவதைக் காட்டியது. “அது ஒரு மணி நேரம் நகரவே இல்லை… பார்க்க சோர்வாக இருந்தது” என ஹாரி சிங் கூறினார்.
ஹாரி சிங் பென்குயின் மீட்பவர்களை அழைத்து, அதை காப்பாற்றும் பணிகளைத் தொடங்கினார். காரணம், பென்குயின் தண்ணீரில் இறங்கவில்லை, இதனால் கடற்கரையில் சுற்றித் திரியும் பிற வேட்டையாடும் விலங்குகளுக்கு பிங்கு பென்குயின் சாத்தியமான இலக்காக மாறியது. “நாயோ, பூனையோ பென்குயினை வேட்டையாடி சாப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.