தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்கள் வெளியாவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் முக்கிய முடிவுகள் எடுத்ததாக செய்திகள் வெளியானது. இது மீண்டும் திரையரங்க உரிமையாளர்கள் VS தயாரிப்பாளர்கள் என உரசலை ஏற்படுத்தி இருக்கிறதா?
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரத்துக்கு பிறகு கடந்த வாரம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. புதுப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ஹாலிவுட் படங்களும், ஏற்கனவே தியேட்டரில் வெளியாகி வெற்றியடைந்த சில தமிழ் திரைப்படங்களும்தான் திரையிடப்பட்டன. கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்ட போது, சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை பல படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பும் பெற்றது. இப்படி நேரடி ஓடிடி படங்கள் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாயின. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் ‘லாபம்’, ‘தலைவி’ உள்ளிட்ட பல படங்கள் திரையரங்குகளில் இந்த மாதம் திரையிடப்பட இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், ‘டிக்கிலோனா’, ‘அனபெல் சேதுபதி’ உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியிலும், ‘துக்ளக் தர்பார்’ படம் நேரடியாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது திரையரங்க உரிமையாளர்கள் ஓடிடியில் வெளியான படங்களை மீண்டும் திரையரங்குகளில் திரையிடுவதில்லை என முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியானது.
அதாவது, முன்பு ஓடிடியில் வெளியான பிறகு படங்கள் நான்கு மாதங்களுக்கு பின்பு திரையரங்குகளில் வெளியிடலாம் என ஒப்பந்தம் இருந்த நிலையில் அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்திருந்தனர். தற்போது அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டு, ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் மீண்டும் திரையிடுவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் முதலில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியீடு எனவும், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கான முன்னோட்டத்திற்கு (Preview Show) திரையரங்குகளில் அனுமதி இல்லை எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.