கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபிறகும் இத்தகைய மாற்றங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகின்றன.
இதில் எந்த மாற்றம், கொரோனாவுக்கு எதிராக உடலை சிறப்பாக தயார்படுத்துகிறது?
இது போன்ற ஒரு கேள்வியை ஓராண்டுக்கு முன்பு கேட்டிருந்தால்கூட அது கிட்டத்தட்ட ஒரு பாவச்செயலைப் போல இருந்திருக்கும். ஏனென்றால் முதல் முறையாக கொரோனா தொற்று ஏற்படுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக வயோதிகர்களுக்கும், ஏற்கெனவே சில உடல் நலப்பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஆபத்தானது.
ஆனால், இப்போது நாம் கொரோனாவுக்கு எதிரான நோய்த் தடுப்பாற்றல் சுத்தமாக இல்லாத நிலையில் இல்லை. நிறைய பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு கொரோனா நோய் வந்துவிட்டுப் போய்விட்டது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டுமா என்பது இப்போது முக்கிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கேள்வி. அதைப் போலவே ஏற்கெனவே நோய் மூலமாகவோ, தடுப்பூசி மூலமாகவோ நோய்த்தடுப்பாற்றல் ஏற்பட்ட பெரியவர்களுக்கு இந்த தடுப்பாற்றலை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்ற கேள்வியும் முக்கியமானது. நேரடியாக வைரஸ் மூலமாகவே இந்த தடுப்பாற்றலை மேம்படுத்திக்கொள்வது சிறந்ததா? அல்லது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் மூலம் நோய்த்தடுப்பாற்றலை மேம்படுத்திக்கொள்வது சிறந்ததா? இந்த இரண்டுமே விவாதத்துக்குரிய பிரச்னைகள்.
“கோவிட் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டியிருக்கும். நீண்ட காலத்துக்கு இப்படி செய்யவேண்டியிருக்கும் என்று நாம் நினைக்கிறோம். இது போன்ற சூழ்நிலை, நாமே நம்மை ஒரு பொறியில் மாட்டிக்கொள்வது போல ஆகும்,” என எடின்பரோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நோய் எதிர்ப்பியலாளர் பேராசிரியர் எலனோர் ரிலே என்னிடம் கூறினார்.