திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின்.

டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் 500 மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. தினகரனும் அவரது மனைவி அனுராதாவும் இங்கேதான் வாக்கிங் போவார்கள். ஆனால், அவர்கள் இருவரும் பெரும்பாலும் மாலை நேரத்தில்தான் நடப்பார்கள். கடந்த வாரம் தினகரனும் அவரது மனைவியும் திடீரென காலையில் வாக்கிங் வந்திருக்கிறார்கள். எப்போதும் காலை நேரத்தில் வாக்கிங் வரும் ஸ்டாலினும் அங்கே வந்திருக்கிறார். நடைபயணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிரெதிரே சந்தித்தார்களாம். இருவரும் சிரித்தபடியே பரஸ்பரம் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துள்ளனர். Source மின்னம்பலம்.காம்

மேற்கண்ட செய்தியின் பின்னனி என்ன?

திமுகவுடன் தினகரன் கூட்டணி வைத்து செயல்படுகிறார், அவர்கள் இருவரும் சேர்ந்து அதிமுக அரசை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று அதிமுக அமைச்சர்கள் பலரும் பொது மேடைகளிலும், மீடியாக்களிலும் கருத்துகூறி வரும் நிலையில் முகஸ்டாலினின் வாக்கிங் ஸ்பாட் மாறியதும், தினகரனின் வாக்கிங் டைம் மாறியதும் அரசியல் நோக்கர்களின் புருவம் உயர்த்த வைத்துள்ளது. நெடுங்காலமாக ஐஐடி வளாகத்தில் நடைபயின்ற முகஸ்டாலினும், வழக்கமாக மாலை வேளையில் நடைபயிலும் தினகரனும் கடந்த வாரம் ஒரே நேரத்தில் அடையாறு ஆலமரம் அமைந்துள்ள வளாகத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதன் பின்னனி பற்றி அறிந்து கொள்ள தினகரனுக்கு நெருக்கமான தீவிர ஆதரவாளரைத் தொடர்புகொண்டோம்!

கடந்த பல மாதங்களாகவே எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசைக் கலைக்க பல வகைகளில் முயன்றும் தோழ்வியைத் தழுவிய தினகரன் தரப்பு , மலைபோல் நம்பியிருந்த கடைசி ஆயுதமான 18எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாக அமையவில்லை ,மேலும் திவாகரன் தரப்பும் தற்போது தனியாக பிரிந்து தினகரனுக்கு எதிராக செயல்பட்டு வரும் சூழலில், இனி ஆனது ஆகட்டும், போனது போகட்டும் என்று முடிவெடுத்து வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தங்களது “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு” இருக்கும் செல்வாக்கை உயர்த்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயண திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறார்கள். சுற்றுப்பயணம் என்பதைவிட தொண்டர்களின் இல்லங்களில் நடக்கும் “கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு விழா, பெயர்சூட்டு விழா, படத்திறப்பு விழா, என தினகரன் வீட்டுக்கு வரும் அழைப்பிதழ்களின் தேதிகளை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி மேற்கொள்ளப்படும் பணத்தின் போது தான் பயணிக்கும் பகுதிகளில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு முன்கூட்டியே அமமுக நிர்வாகிகளுக்கு தினகரனின் உதவியாளர் ஜனா என்கிற ஜனார்த்தனன் மூலமாக உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த வாரம் தினகரனும், முக ஸ்டாலினும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அப்படி சந்தித்த போது பெரிதாக ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை என்று கூறிய தினகரன் ஆதரவாளர், அடுத்து கூறிய தகவல் நமக்கு திகைப்பை ஏற்படுத்தியது.

அந்த தகவல்”சமீப காலமாக தினகரனின் கட்சியில் உறுப்பினர்களாக சேருபவர்களின் எண்ணிக்கையில் பெரும் பகுதி திமுக தொண்டர்களாம், அப்படி சேரும் திமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் கூறும் ஒருமித்த கருத்து “திமுகவின் அத்தியாயம் கலைஞரோடு முடிந்து விட்டது, முக ஸ்டாலின் செயல்பாடுகள் சமீபகாலமாக சுத்த முட்டாள்தனமானதாக உள்ளது, இனியும் முக ஸ்டாலினை நம்பினால் தங்களது (பதவி)கனவு நிறைவேறாது என்று தினகரன் தலைமையை ஏற்றுக் கொள்வதாக புதிதாக சேரும் நபர்கள் கூறியுள்ளார்களாம்.

மேற்கண்ட தினகரன் தரப்பு முக்கிய நபரின் திமுக பற்றிய தகவலை உறுதிப்படுத்த திமுக தரப்பு மாநில நிர்வாகிகளில் பிரதானமானவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது கிடைத்த தகவல்கள்,

சமீபகாலமாக செயல்தலைவர் முகஸ்டாலினின் செயல்பாடுகள் சரியில்லை என்ற கலகக் குரல்கள் திமுகவில் எழுந்தது உண்மை தான். அந்த கலகக் குரல்களை நிசப்தமாக்கும் முயற்சியின் தற்போதைய வெளிப்பாடுதான் திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் மாற்றங்கள். எளிதாகக் கூற வேண்டுமென்றால் தன்மீது உள்ள குற்றச்சாட்டை மறைக்க முகஸ்டாலின் முயற்சிப்பதன் வெளிப்பாடு தான் நிர்வாகிகள் மாற்றம் என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது

தொடர் போராட்டங்கள் மூலம் அதிமுக அரசைக் கலைக்க முயற்சிகளில் திமுக வினர் ஈடுபட்டு வரும் போதெல்லாம் “வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைப்பது போல” திடீர் உத்தரவுகளைப் பிறப்பித்து அதிமுக அரசைக் கலைக்க கிடைத்த பல நல்ல வாய்ப்புக்களைத் தவற விட்டுவிட்டார். கடந்த ஜனவரி மாதம் தினகரன் தரப்பு ஆட்சியைக் கலைக்க நாம் சேர்ந்து செயல்படலாம் என்று திமுகவின் தென்மாவட்ட முக்கிய புள்ளி மூலமாக தூது விட்டனர். ஆனாலும் அப்போது ஏற்க மறுத்துவிட்டார். சமீபத்தில் மதுரையில் பேசிய முக அழகிரி செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார், செயல்படும் தொண்டர்கள் தன் பக்கமே என்று கூறி பரபரப்பு கிளப்பியுள்ள நிலையில் இனியும் தாமதிக்க வேண்டாம் என்று திமுகவின் உயர்ட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை போராட்டத்தில் திமுக தான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பைக் காட்டி போராடி வந்தது. ஆனால் நீதிமன்றம் தலையிட்டு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. இனி திமுக எந்த போராட்டத்தையும் முன்நின்று போராடத் தயாராக இல்லை என்பதைவிட, திமுகவின் போராட்டங்களுக்கு தற்போதைய திமுக எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை , என்பதை தாமதமாக புரிந்து கொண்ட செயல்தலைவர் வேறு வழியின்றி தனக்கிருக்கும் கடைசி வாய்ப்பான தினகரனின் தூதை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார். தினகரனின் சுற்றுப்பயண விவரங்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே திமுக முக்கிய நிர்வாகிகள் மூலமாக சம்பந்தப்பட்ட பகுதி திமுக நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்படுவதோடு, கூட்டங்களுக்கு ஆட்களை பெருமளவில் திரட்டி தினகரனுக்கு மக்கள் ஆதரவு இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும், அந்தக் கூட்டங்களை தொலைக்காட்சி மூலம் நேரலையாகக் காட்ட தொலைக்காட்சி நிறுவனங்களிடம் சன் டைரக்ட் உரிமையாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அஅதன் வெளிப்பாடாகவே சமீபத்தில் நடந்த கூட்டங்களில் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு பெருமளவில் மக்கள் ஆதரவு இருப்பது போல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது,என்று விவரித்தார்.

இடையில் குறுக்கிட்ட நாம் “நீங்கள் இப்படி செய்வதால் தினகரனின் செல்வாக்கு விரிவடைந்து , திமுகவின் வாக்கு வங்கி சரிவடையும் அபாயம் உள்ளதே! என்ற கேள்வியை முன் வைத்தோம்.

அதற்கு பதிலளித்த திமுக மாநில நிர்வாகி கூறியதாவது:

நிச்சயமாக மேற்கண்ட விசயங்கள் நடப்பதால் திமுகவுக்கு பின்னடைவு இருப்பதாக கருதினாலும், இந்த அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேறு வழியில்லை, மத்தியில் பாஜக ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்பதில் திமுகவுக்கு சந்தேகமேயில்லை. குறிப்பாக எடப்பாடியின் அரசியல் நகர்வுகள் எங்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதே நிஜம். எனவேவதான் வரும் 2019 பிரதமர் தேர்தலில் பாஜக எதிர்ப்புக் கட்சிகளை ஒன்றிணைத்து புதிய ணியை உருவாக்கி அந்த அணியில் தினகரனின் அமமுக வையும் சேர்க்கும் திட்டத்தைசெயல்படுத்த ஆரம்பித்துள்ளோம், திமுக தொண்டர்கள் சிலர் தினகரனின் கட்சியில் சேருவதால் பாதிப்பு திமுகவுக்கல்ல. எங்களுடைய நோக்கம் பாஜக ஆட்சியை விரும்பாத நடுநிலை வாக்காளர்களை ஒன்று சேர்க்க தினகரனை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். வருகிற ஆகஸ்ட் 10 ம்தேதி மாநில சுயாட்சி மாநாடு என்ற பெயரில் புதிய அணியின் துவக்க விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போதிருந்தே நடந்து வருகிறது.பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்புகள் விடுத்து வருகிறோம்! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோழ்வியடைந்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கலைத்து விட்டு திமுக ஆட்சியமைக்கும், தினகரனுக்கு மத்திய மந்திரிசபையிலும், மாநில ஆட்சியிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும், என்று விவரித்தார் அந்த திமுக மாநில நிர்வாகி!

ஆக மொத்தத்துல நாம் முன்பே கூறியது போல ஆகஸ்ட் மாதம் அனலடிக்கும் அரசியல் நகர்வுகள் ஆரம்பம்……