இந்திய வாலிபரைக் கொன்றவர்! துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் கனாஸ்சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவரைச் சுட்டுக் கொன்றவராகக் கருதப்படும் இளைஞரைக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (வயது 25). ஐ.டி. இன்ஜினீயரான சரத் கொப்பு, மிசோரி மாநிலம், கனாஸ் சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

மேலும், சரத் கொப்பு படித்துக்கொண்டே, அங்குள்ள ஜேபிஷ் அன்ட் சிக்கன் மார்க்டெ எனும் ஹோட்டலில் பகுதி நேரமாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி மாலை வழக்கம் போல் ஹோட்டலுக்கு சரத் கொப்பு சென்றார். ஹோட்டலுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர், ஹோட்டலுக்கு வந்திருந்தவர்களிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, சரத் கொப்புவை துப்பாக்கியால் சுட்டு அந்த நபர் தப்பிவிட்டார்.

இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சரத் கொப்பு, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இது குறித்து கனாஸ்சிட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலையாளி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

கடந்த வாரம் சரத் கொப்புவின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கனாஸ்சிட்டி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த கேமராவில் பதிவான உருவத்தில் இருக்கும் நபரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அந்த கண்காணிப்பு கேமராவில் இருக்கும் உருவத்தைப் போன்ற ஒருவரை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரைப் புலனாய்வு போலீஸார் தீவிரமாக கண்காணித்து விசாரணை நடத்தியதில், சரத் கொப்புவைக் கொலை செய்தவர் அந்த இளைஞர்தான் என்பது உறுதியானது.

இதையடுத்து, அந்த நபரைக் கைது செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டபோது, அவர் போலீஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்ப முயன்றார். அப்போது போலீஸாருக்கும், அந்த இளைஞருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார், 3 போலீஸாரும் காயமடைந்தனர் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.