பரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு? கண்டு கொள்வார்களா அதிகாரிகள்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் பல்வேறு இன்னல்களை சாமானிய மக்களும், வியாபாரிகளும் எதிர்க் கொண்டு வருகின்றனர்.

அதற்கு முன்னுதாரணமாக பரமக்குடி நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கை குறிப்பிடலாம்!

மதுரை – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரமக்குடி நகரம். பல்வேறு வியாபார நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் நிறைந்துள்ள இந்த பரமக்குடி நகரத்தில் மிக முக்கியமான சாலையாக கருதப்படும் மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகளைத் தூர் வாரி அந்தக் கழிவுகளை மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மழைபோல குவித்து வைத்துச் செல்லும் நகராட்சி நிர்வாகம் ,அந்தக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த முயற்சிப்பதேயில்லை!

அதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறும் விளக்கம் “கழிவு நீர் ஓடைகளைத் தூர் வாரும் போது அந்தக் கழிவுகளை வண்டிகளில் எடுத்துச் சென்று நகருக்கு ஒதுக்குப்புற பகுதிகளில் அமைந்துள்ள குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு சென்று அப்புறப்படூத்தவே செய்கிறோம். ஆனால் கழிவுகள் ஈரத்தன்மையுடன் இருக்கும் போது அவற்றை நகராட்சி வாகனங்கள் மூலம் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக கொண்டு செல்லும் போது கழிவுகளில் உள்ள நீரானது சாலைப் பகுதிளில் வடிந்து அதன் மூலம் பொது மக்களுக்கு தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்தி விடுகிறது என்பதால் , தூர்வாரப்பட்ட கழிவுகளை நாலைந்து நாட்களுக்கு காய வைத்து, ஈரத்தன்மை குறைந்தவுடன் அப்புறப்படுத்துவதே தற்போதைய நடைமுறையில் உள்ளது, என்ற விளக்கத்தை நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப்படங்கள் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சந்தைப்பேட்டை அருகே அமைந்துள்ள ஷாலோம் ITI எதிரில் அம்மா அல்லுக்கூடம் செல்லும் தெருவை மறைத்து கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டது…….

ஆனால் பொதுமக்களோ, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருக்களில் மக்கள் நடக்கவே முடியாதபடி சாக்கடைக் கழிவுகளை தூர்வாரி கொட்டிச் செல்லும் ஊழியர்கள் ஒருவாரம், 10 நாள் வரை அப்புறப்படுத்துவதேயில்லை, இந்த நேரங்களில் தீடீரென மழை பெய்துவிட்டால் மக்களின் பாடு திண்டாட்டம் தான்! கழிவுகளின் நாற்றத்தால் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாக வேண்டும், மற்றுமொரு விஷயம் தூர்வாரப்பட்ட கழிவுகள் மழைத்தண்ணீருடன் கலந்து மீண்டும் கழிவு நீரோடைகளில் அடைப்பபை ஏற்படுத்தி தெருக்களை சாக்கடை நீரால் நிரம்பி நாறத்துவங்கி விடுகிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் சாக்கடைக் கழிவுகளை தூர்வாரும் போதே அப்புறப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று பரமக்குடி பகுதிவாழ் மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டு கொள்வார்களா நகராட்சி அதிகாரிகள்? நடவடிக்கை எடுப்பார்களா?

காத்திருப்போம்………