நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் நோக்குடன் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட பிஎம் கேர் நிதியம் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 551 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “551 ஆக்சிஜன் நிலையங்களும் மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும். வெகு விரைவில் அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரைவாக ஆக்சிஜன் விநியோகம் செய்ய இந்த ஆலைகள் உதவியாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இந்த ஆலைகளை உருவாக்குவதற்கான பணிகளை இந்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு பிஎம்கேர் நிதி மூலம் கூடுதலாக 162 பிரத்யேக பிரஷர் ஸ்விங் அப்சார்ப்ஷன் ஆக்சிஜன் ஆலைகளை மருத்து வளாகங்களில் அமைக்க ரூ. 201.58 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய ஆக்சிஜன் ஆலைகள் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் நரேந்திர மோதி முதலாவது பொது முடக்கத்தை அறிவித்தார். அப்போது வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடையாளர்கள் தாராளமாக பிஎம் கேர் ஃபண்டு என்ற பெயரிலான அமைப்புக்கு நிதியுதவி தருமாறு கேட்டுக் கொண்டார். அவரது அறிவிப்பை ஏற்று அடுத்த சில நாட்களிலேயே கோடிக்கணக்கில் நிதி குவியத் தொடங்கியது.
ஆனால், இந்த பிஎம்கேர் நிதி, எந்த அரசுத்துறையின் கீழ் செயல்படுகிறது என்று தகவல் உரிமை சட்டத்தின்படி விவரம் கேட்டபோது, அதற்கான பதிலை அரசு தரப்பு சரியாக வழங்கவில்லை. மேலும், இந்த நிதி, மத்திய கணக்குத் தணிக்கையாளர் வரம்புக்குள் வராது என்றும் கூறப்பட்டது. காரணம், நாடு முழுவதும் பேரிடர் காலங்களில் மாநிலங்களுக்கு நிதி வழங்க பிரதமரின் நிவாரண நிதி என்ற பெயரிலேயே இதுநாள்வரை நன்கொடை வழங்குவது நடைமுறையாக இருந்தது. ஆனால், பிஎம்கேர் நிதியம், அரசிடம் இருந்து நிதி ஏதும் பெறவில்லை என்பதால் அரசு கட்டுப்பாட்டில் இல்லை என்று அரசு தரப்பு கூறி வருகிறது. அதே சமயம், இந்த நிதியத்தை அலுவல்பூர்வமாக மேற்பார்வையிடும் அரசு அந்த நிதியை கொரோனா தொடர்பான முக்கிய மருத்துவ திட்டங்களுக்காக நன்கொடையாக பெற இந்த அமைப்பை ஒரு பாலம் போல பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது.