சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா.
இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும் ஆராயும். இந்த விண்கலன் ஒவ்வொன்றையும் அனுப்புவதற்கு தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விண்கலன் 2028ம் ஆண்டும், இரண்டாவது கலன் 2030-ம் ஆண்டும் செலுத்தப்படும்.
கடந்த 30 ஆண்டு காலமாக அமெரிக்கா வெள்ளிக்கு விண்கலன் எதையும் அனுப்பியதில்லை. எனவே, இந்த இரண்டு விண்கலன்களும் வெள்ளி கோளை ஆராய வாய்ப்பளிக்கும் என்று நாசா அமைப்பின் தலைவர் பில் நெல்சன் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு வெள்ளிக்கு அமெரிக்கா அனுப்பிய கடைசி விண்கலன் மெகல்லன். இந்த சுற்றுவட்டக் கலன் 1990ல் செலுத்தப்பட்டது. அதற்குப் பிறகு ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அனுப்பிய விண்கலன்கள் வெள்ளியை சுற்றிவந்துள்ளன. இந்த விண்கல திட்டம் தொடர்பான ஆய்வேடுகளை சக ஆய்வாளர்கள் ஆராய்ந்து ஏற்றதை அடுத்து, இந்த விண்கலன்களால் ஏற்பட சாத்தியமான அறிவியல் பலன்களையும், இந்த விண்கலன்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்த பிறகு இந்த திட்டங்கள் ஏற்கப்பட்டன.