பிரேசிலின் தொலைதூரப் பகுதியில் உள்ள அமேசான் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் விமானி ஆண்டோனியோ சேனா தன்னந்தனியாக மாட்டிக்கொண்டபோது, அவரைச் சுற்றி கருஞ்சிறுத்தைகளும், பெரு முதலைகளும், அனகோண்டா பாம்புகளும் உள்ளன என்பதை அறிந்து கொண்டார்.

அமேசான் காட்டுக்குள் ஏற்பட்ட விமான விபத்துக்கு பின் தம்மைச் சுற்றியுள்ள உயிர்க்கொல்லி விலங்குகள் குறித்து மட்டுமல்ல, நீர், உணவு, உறைவிடம் ஆகியவை குறித்தும் அந்த 36 வயது விமானி கவலைப்பட வேண்டியிருந்தது. தாம் மீட்கப்பட பல நாட்கள் ஆகும் என்று ஆண்டோனியோ அச்சப்பட்டது அப்படியே நடந்தது. விமானம் விபத்துக்குள்ளான பின் ஒரு மாத காலத்துக்கும் மேல் தாம் தனிமையில் உயிர் வாழப் போராட வேண்டியிருக்கும் என்று அப்போது அவர் எதிர்பார்க்கவில்லை.

”மே டே… மே டே… மே டே… பாப்பா.. டேங்கோ.. இந்தியா.. ரோமியோ.. ஜூலியட் இஸ் ஃபாலிங்..” இப்படித்தான் ஆண்டோனியோ சேனா, கீழே விழும் முன் கடைசியாகப் பதிவு செய்த செய்தி தொடங்கியது. 2021 ஜனவரி மாதம் இந்த விபத்து நடந்தது. விமானம் கீழே விழுந்த சமயத்தில் ஆண்டோனியோ சேனா மட்டும் தனியாக அந்த விமானத்தில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார்.

தொலைதூர பகுதிகளில் உள்ள சுரங்கத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக அவர் பயணித்துக் கொண்டிருந்தார். “900 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்தின் இன்ஜின் திடீரென நின்று விட்டது. காட்டின் நடுவே நான் வேறு வழியில்லாமல் தரை இறங்க வேண்டியதாயிற்று,” என்று பிபிசி உலக சேவையிடம் பேசிய ஆண்டோனியோ தெரிவித்தார்.

அமேசான் ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள, ஏதோ ஒரு காட்டுப் பகுதியில் அடர்ந்த கிளைகளுக்கு நடுவே வேகமாக உரசிக்கொண்டு அந்த செஸ்னா சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது அவர் மரணத்திலிருந்து தப்பித்து விட்டார். ஆனால் அவருடைய பிரச்னைகள் அப்போதுதான் தொடங்கின. “விமானத்தின் சிதைந்த பாகங்கள் முழுவதும் எரிபொருள் சிந்தியிருந்தது. நான் உடனடியாக அந்த விமானத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. ஏனென்றால் நான் அப்போது மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

By Anna