கிரீன்லாந்தின் கடற்கரையிலிருந்து வடக்கே, உலகின் வடகோடியில் இருக்கும் தீவு என்று தாங்கள் நம்பும் தீவு ஒன்றை அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுவரை உலகிலேயே மிகவும் வட கோடியில் இருக்கும் தீவு என்று நம்பப்பட்ட ஊடாக் தீவில் மாதிரிகளை சேகரிப்பதற்காக, ஜூலை மாதம் அறிவியலாளர்கள் இந்தத் தீவைச் சென்றடைந்தனர். ஊடாக் தீவு 1978இல் கண்டறியப்பட்டது. ஆனால் அந்தத் தீவுக்குச் சென்று திரும்பிய பின்பு தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய ஆர்டிக் தீவுகளின் நிலையை பதிவு செய்வதற்கான பொறுப்பில் உள்ள டென்மார்க் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சென்ற தீவு, ஊடாக் தீவிலிருந்து மேலும் 800 மீட்டர் வடக்கே இருப்பது தெரியவந்தது.
60 X 30 மீட்டர் அளவுள்ள இந்தத் தீவுதான் வட துருவத்துக்கு மிகவும் அருகிலுள்ள நிலப்பகுதி என்று அவர்கள் கூறுகிறார்கள். கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுபாட்டில் உள்ள சுயாதீன ஆர்டிக் பிரதேசமாகும். “நான் ஒருங்கிணைக்கும் டென்மார்க் – சுவிட்சர்லாந்து கூட்டு அறிவியல் ஆராய்ச்சியின் போது இந்தத் தீவு கண்டறியப்பட்டது,” என்று ஆர்டிக் ஸ்டேஷன் இன் கிரீன்லாந்து எனும் கோப்பன்கேகன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் நிலையத் தலைவர் மோர்டென் ராஷ் பிபிசியிடம் தெரிவித்தார். இதுவரை உலகின் வடகோடியில் இருக்கும் தீவு என்று அறியப்பட்ட தீவுக்கு செல்வதும் எங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தது. இவ்வளவு தீவிரமான சுற்றுச்சூழலில் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ளும் புதிய உயிரினங்களைக் கண்டறிவதற்காக எங்கள் குழு அங்கு சென்றது என்று மோர்டென் கூறுகிறார்.
ஒரு சிறிய ஹெலிகாப்டரில் நாங்கள் ஆறு பேர் சென்றோம். ஊடாக் தீவு இருக்கும் நிலையை நாங்கள் சென்றடைந்த பொழுது எங்களால் அதைக் கண்டறிய இயலவில்லை. உலகின் இந்தப் பகுதியில் வரைபடங்கள் மிகவும் துல்லியமாக இருக்காது என்று அவர் கூறுகிறார்.
இதன் காரணமாக அந்தத் தீவு எங்கே இருக்கிறது என்று நாங்களாகவே தேடத் தொடங்கினோம். உற்சாகம் மிகுந்த சில நிமிடங்களுக்கு பின்பு கழிமண், பனிப்பாறை வண்டல் மற்றும் சரளைக் கற்கள் கடல் பனியால் சூழப்பட்ட, செடிகள் எதுவும் முளைக்காத ஒரு பகுதியைச் சென்றடைந்தோம்.